புதுடில்லி:புதுடில்லி மாநகராட்சி மேயர் தேர்தலில், நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க அனுமதி தரக்கூடாது என்பதை வலியுறுத்தி, பா.ஜ., தலைமை அலுவலகம் முன், ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
அதேபோல், மேயர் தேர்தலை உடனே நடத்தக் கோரி, ஆம் ஆத்மி அலுவலகம் முன், பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
புதுடில்லி மாநகராட்சி தேர்தல் டிச. 4ல் நடந்தது. மொத்தம் 250 வார்டுகளில் ஆம் அத்மி 134, பா.ஜ., 104, காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்றன.
இதைத் தொடர்ந்து, ஜன. 6 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாநகராட்சி கூட்டம் நடந்தது. ஆனால், சபையில் இரு கட்சிகளும் கடும் அமளியில் ஈடுபட்டதால், மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடக்கவில்லை.
இதற்கிடையே 24ம் தேதி நடந்த கூட்டத்தில், துணை நிலை கவர்னர் 10 நியமன கவுன்சிலர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து நேற்று முன் தினம் நடந்த கூட்டத்தில், மேயர் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நியமன கவுன்சிலர்களும் மேயர் தேர்தலில் வாக்களிப்பர் என, தற்காலிக தலைவர் சத்ய சர்மா அறிவித்தார். இதற்கு, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மட்டுமே ஓட்டுப் போட தகுதி பெற்றவர்கள். நியமன கவுன்சிலர்கள்ஆலோசனை வழங்கும் பார்வையாளர்களாக மட்டுமே செயல்பட முடியும் என வாதிட்டனர்.
இதையடுத்து ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால், மேயர் தேர்தல் நடத்தப்படாமலேயே கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், புதுடில்லி ரோஸ் அவென்யூ சாலையில் பா.ஜ., அலுவலகம் முன் நேற்று திரண்ட ஆம் ஆத்மி கட்சியினர், மாநகராட்சி மேயர் தேர்தலை திட்டமிட்டு தடுப்பதாக பா.ஜ., மீது குற்றம்சாட்டி கோஷமிட்டனர். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்கு மட்டுமே மேயரை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என்றும் வலியுறுத்தினர்.
இதையொட்டி, ரோஸ் அவென்யூவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அதேபோல, ஆம் ஆத்மி தலைமை அலுவலகம் முன் நேற்று, பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது, மேயர் தேர்தலை நடத்த விடாமல், மாநகராட்சியில் அமளியில் ஈடுபடும் ஆம் ஆத்மி கவுன்சிலர்களை கண்டித்து கோஷமிட்டனர். பா.ஜ., மேயர் வேட்பாளர் ரேகா குப்தா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கோவில் பணியாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்கக் கோரி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன், பா.ஜ.,வின் கோவில் பிரிவு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. புதுடில்லி மாநகரில் உள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். அப்போது, 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்டனர். போஜ்புரி மொழி பிரபல நடிகரும், பா.ஜ., - எம்.பி.,யுமான மனோஜ் திவாரி, அர்ச்சகர்களுடன் இணைந்து பஜனை நடத்தினார்.
பா.ஜ., கோவில் பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில், கட்சியின் செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா, தெற்கு டில்லி எம்.பி., ரமேஷ் பிதுரி, டில்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராம்வீர் சிங் பிதுரி உட்பட பலர் பேசினர்.ஹிந்து, சீக்கிய, கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மசூதிகளில் இமாம்கள் மற்றும் முவாஜின்களுக்கு ஏற்கனவே மாதச் சம்பளம் வழங்கி வரும் டில்லி அரசு மற்ற மதத்து வழிபாட்டு தலங்களை புறக்கணித்து விட்டதாகவும் குற்றம் சாட்டினர்.