புதுடில்லி:தலைநகர் புதுடில்லியில் தற்போது நடைமுறையில் உள்ள மதுபான கொள்கையே நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, கடந்த 2021- - 22ம் ஆண்டுக்கான புதிய மதுபானக் கொள்கையை அரசு உருவாக்கியது. ஆனால், இந்த திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுகுறித்து, விசாரணை நடத்திய துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, அரசின் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்த தடை விதித்து, முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ல் இருந்து, பழைய மதுபான கொள்கைப் படியே மது விற்பனை நடந்து வருகிறது.
இந்நிலையில், புதிய மதுபான கொள்கையை தயாரிக்க நிதித் துறை முதன்மைச் செயலர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தன் அறிக்கையை அரசிடம் இதுவரை சமர்ப்பிக்கவில்லை.
அந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்து, அமைச்சரவை மற்றும் துணை நிலை கவர்னர் அதற்கு ஒப்புதல் அளித்தபிறகே புதிய கொள்கையை அமல்படுத்த முடியும். ஆனால், இந்த நடைமுறைகள் இந்த மாதத்துக்குள் முடிய சாத்தியமில்லை.
எனவே, பழைய மதுபானக் கொள்கை இம்மாதம் 28ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், நடைமுறையில் உள்ள பழைய மதுபானக் கொள்கையை நீட்டிக்க வாய்ப்புள்ளது என அரசின் உயர் அதிகாரிகள் சிலர் கூறினர்.
புதுடில்லியில் இப்போது, 570 சில்லறை மதுபானக் கடைகள் உள்ளன. மேலும், 950க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகள் மது விற்பனை செய்ய 'லைசென்ஸ்' பெற்றுள்ளன.
முன்னதாக, நிதித் துறை செயலர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு, புதிய மதுபானக் கொள்கை தயாரித்து சமர்பிக்க ஒரு மாதம் அவகாசம் கோரியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.