புதுடில்லி:கடந்த சில நாட்களாக தொடர் சரிவில் இருந்த 'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவன பங்குகள் விலை, நேற்று 20 சதவீத உயர்வைக் கண்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான 'ஹிண்டன்பர்க் ரிசர்ச்', அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டுகளுடன் கூடிய அறிக்கையை வெளியிட்டதை தொடர்ந்து, அதானி நிறுவன பங்குகள்வீழ்ச்சியை சந்தித்து வந்தன.
இந்நிலையில், அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் நிறுவன பங்குகள், நேற்று 20 சதவீதம் வரை உயர்ந்தது.
வர்த்தகத்தின் முடிவில், இந்நிறுவன பங்குகள் விலை, தேசிய பங்குச் சந்தையில் 15. 28 சதவீத உயர்வுடன், 1,813 ரூபாய் எனும் அளவில் நிலை பெற்றது.
திங்கள் கிழமையன்று, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கிட்டத்தட்ட 9,130 ரூபாய் மதிப்பிலான கடன்களை முன்கூட்டியே திருப்பிச்செலுத்துவதாக அறிவித்தார்.
இது, முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கும் ஒரு நடவடிக்கையாக அமைந்ததை அடுத்து, நேற்று சந்தையில் நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்தது.
அதானி என்டர்பிரைசஸ் நிறுவன பங்கின் விலை, 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்ததை அடுத்து, அதன் வர்த்தகம் மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், அதானி குழுமத்தின் பிற நிறுவனங்கள் கலவையான போக்கை சந்தித்தன. 'அதானி வில்மார்' 5 சதவீதத்துக்கும் அதிகமாக விலை உயர்ந்தது. 'அதானி டோட்டல் காஸ்' 5 சதவீத விலை சரிவைக் கண்டது.
'அதானி டிரான்ஸ்மிஷன்' 0.52 சதவீத சரிவைக் கண்டது.