ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் வசிக்கும் பகுதி, துணைத் தலைவர் வெற்றி பெற்ற வார்டில் உள்ள கண்ணதாசன் நகர் பகுதியில் சாலை, கழிவு நீர் கால்வாய் வசதி அமைக்காததை கண்டித்து, ஆத்திரமடைந்த பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.
15 ஆண்டுகள்
பேரூராட்சியில் உள்ள, 7வது வார்டில் பஜார், கண்ணதாசன் நகர், குயவன் தெரு, தாலுகா அலுவலக சாலை, சாவடி தெரு ஆகிய பகுதிகள் உள்ளன.
இதில், கண்ணதாசன் நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியில் சாலை அமைத்து, 15 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது சாலை மிகவும் பழுதடைந்து கற்கள் பெயர்ந்த நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது.
இச்சாலை வழியே ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் செல்கின்றனர்.
மோசமான நிலையில் உள்ள இந்த சாலையில் மாணவர்கள், டூ - வீலர்களில் செல்பவர்கள் விழுந்து காயம் அடைகின்றனர்.
வயதானவர்கள் நடந்து செல்ல அவதிப்படுகின்றனர். மழைக் காலங்களில் மழை நீர் குளம்போல் தேங்கி விடுகிறது.
கண்ணதாசன் நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் வசதியும் இல்லை. இப்பகுதியில் குடியிருப்புவாசிகள் சிலர் இரவு நேரங்களில் கழிவு நீரை சாலையில் திறந்து விடுகின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், நேற்று பேரூராட்சி அலுலகத்தை முற்றுகையிட்டனர்.
தலைவர் வசிக்கும் பகுதி
ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள 7வது வார்டிற்கு உட்பட்ட கண்ணதாசன் நகர் பகுதியில் பேரூராட்சி தலைவர் அப்துல்ரஷீத் குடியிருந்து வருகிறார்.
பேரூராட்சி துணை தலைவர் குமரவேல் இந்த வார்டு கவுன்சிலர் மற்றும் துணை தலைவர். இரண்டு முக்கிய பிரமுகர்கள் இருந்து இந்த பகுதியில் போதுமான அளவு வசதிகள் செய்யப்படவில்லை.
பேரூராட்சி தேர்தல் நடந்து 11 மாதம் ஆன நிலையில், இப்பகுதியில் எவ்வித வசதியும் செய்யவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் செயல் அலுவலர் பதவி, ஆறு மாதமாக காலியாக உள்ளது. சிட்லபாக்கம் பேரூராட்சியில் பணியாற்றும் செயல் அலுவலர் வெங்கடேசன், ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, இரண்டு வாரம் ஆன நிலையில், இதுவரை இங்கு வந்து பொறுப்பு ஏற்கவில்லை.நேற்று, பேரூராட்சி அலுவலகம் வந்த பெண்கள், செயல் அலுவலர் இல்லாததால், சாலை, கால்வாய் வசதி கேட்டு பேரூராட்சி தலைவர் அப்துல்ரஷீத், தலைமை எழுத்தர் பங்கஜம் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறினர்.