என்.வைகை வளவன், மதுரையிலிருந்துஅனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குழந்தை இல்லாதவர்கள், குழந்தை பெற்றுக் கொள்ளும் விஷயத்தில், நம் நாட்டில் எத்தனையோ புரட்சிகள் நடந்துள்ளன. வாடகை தாய் வாயிலாக, குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்; 'டெஸ்ட் டியூப்' வாயிலாக, செயற்கையாக கருத்தரித்தும், குழந்தை பெறுகின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக, பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய நபரும், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவரும், காதலித்து திருமணம் செய்து, அந்த தம்பதிகுழந்தை பெற்றுக் கொள்ளப் போகும் அதிசயம் நடக்கப் போகிறது. பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர், இப்போது எட்டு மாத கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி ஊடகங்களில் பரவி, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம். திருவனந்தபுரத்தில் வசிக்கும், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய சாஹத், கர்ப்பம் தரித்து கர்ப்பிணியாக இருக்கும் படம் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. உலகிலேயே இந்த மாதிரி ஒரு ஆண் கர்ப்பவதியான அதிசயம்,நம் நாட்டில் கேரள மாநிலத்தில் தான் நடந்துள்ளது.
'ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்த குழந்தையால் தான், எனக்கு மரணம் நிகழ வேண்டும்' என்று, பிரம்மாவிடம் மகிஷி வரம் பெற்றதால், சிவபெருமானுக்கும், மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும், குழந்தையாக அய்யப்பன் பிறந்தார் என, கேள்விப்பட்டுள்ளோம்.
மூன்றாம் பாலினத்தவர் திருமணம் செய்து கொண்டாலும், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதை பொய்யாக்கி உள்ளனர், ஜியா - சாஹத் தம்பதி. இறைவன் படைப்பில், இது மாதிரியான என்னென்ன அதிசயங்கள் எதிர்காலத்தில் நடக்குமோ?
ரஜினி நடித்த, எந்திரன் படத்தில், மனிதன் உருவாக்கிய, 'ரோபோ' சாதாரண மனிதன் காதலிப்பது போல, பெண்ணை காதலிப்பதாக, ரசிகர்களின் காதுகளில் மலர் சூடியிருந்தனர். இப்போது, ஆணாக மாறிவிட்ட பெண், தன் கர்ப்பப் பையில் குழந்தையை சுமக்கும் சம்பவம், டாக்டர்களுக்கே மருத்துவ அதிசயமாக தோன்றலாம்.
அட ராமா! எதிர்காலத்தில் இது மாதிரியான எத்தனை மருத்துவ அதிசயங்களை, நாம் காண இருக்கிறோமோ?
lll
வாழ்க... வளர்க... அழகிரியின் தொண்டு!
கே.மணிவண்ணன்,
கோவையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:'அரசியல் காழ்ப்புணர்ச்சி
கொண்டவர்கள் தான், கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்தை எதிர்க்கின்றனர்'
என்று, திருவாய் மலர்ந்திருக்கிறார், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி.
அத்துடன்,
'தன் வாழ்நாள் முழுதும், தமிழ் சமுதாயத்திற்காக, அயராது பாடுபட்டவர்
கருணாநிதி. எழுத்து மற்றும் பேச்சின் வாயிலாக, ஐந்து முறை தமிழக முதல்வராக
பதவி வகித்தவர் அவர்' என்றும்,தி.மு.க., தொண்டனை மிஞ்சும் அளவிற்கு, கூவி
இருக்கிறார்.
அந்த அழகிரிக்கு சில கேள்விகள்...
1977 -
1987 வரை, எம்.ஜி.ஆர்., முதல்வராக பதவி வகித்த காலத்தில், தமிழகத்தை
போராட்டக் களமாக மாற்றியவர் கருணாநிதி. ஆனால், அந்தப் போராட்டங்களில் ஒன்று
கூட மக்களுக்கானதல்ல; இது, எம்.ஜி.ஆருக்கு எதிராக, கருணாநிதி
பின்பற்றியகாழ்ப்புணர்ச்சியா, இல்லையா?
தமிழர்களை தன்
பிரித்தாளும் சூழ்ச்சியால் பிரித்து வைத்தது... ஜி.கே.மூப்பனார் பிரதமராவதை
தடுத்தது... 2009-ல் இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க, காங்கிரஸ்
கட்சிக்கு துணை போனது... இதெல்லாம், தமிழ் சமுதாயத்திற்கு அவர் அயராது
பாடுபட்ட செயல்களா?
1969-ல் அண்ணாதுரை மறைந்த போது, எம்.ஜி.ஆர்., தயவால்முதல்வரானார் கருணாநிதி.
பின், 1972ல் நடந்த சட்டசபை தேர்தலில், பட்டி தொட்டி எல்லாம்பிரசாரம்
செய்து, அவரை மீண்டும் முதல்வராக்கினார் எம்.ஜி.ஆர்., அழகிரி சொல்வது போல
எழுத்து மற்றும் பேச்சாற்றலால்முதல்வரானார் என்றால், 1977 -1987 வரை
கருணாநிதி ஏன் முதல்வராக வில்லை?
கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால், மக்களுக்கு என்ன பயன் என்று, விஞ்ஞானி அழகிரி கூறுவாரா?
மொத்தத்தில்,
தி.மு.க.,வினரை விட, ஸ்டாலினுக்கு அதிகமாக துதிபாடுகிறார் அழகிரி. ஒரு
வேளை, காங்கிரஸ் இவரை கழற்றி விட்டால், தி.மு.க.,வில் வாரிய பதவிக்குதுண்டு
போடுகிறாரோ என்னவோ... இவர் தன் அறிக்கை வாயிலாக, தி.மு.க.,வின், 'சொம்பு
துாக்கி' என்று நிரூபித்துள்ளார்; வாழ்க... வளர்க... அழகிரியின் தொண்டு!
lll
விளம்பர மோகத்தால் வந்த வினை!
ப.ரவீந்தர்
சண்முகம், திருவண்ணாமலையிலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்:
வாணியம்பாடியில்தைப்பூசத்தை முன்னிட்டு, தொழிலதிபர் ஒருவரின் ஏற்பாட்டில்,
இலவச புடவை வழங்குவதற்கான, 'டோக்கன்' வினியோகித்த போது ஏற்பட்ட கூட்ட
நெரிசலில் சிக்கி, நான்கு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, நெஞ்சை
பதைபதைக்க வைத்துள்ளது.
இலவச மோகங்களில் மக்கள் மூழ்கிக்
கிடக்கும்வரை, இத்தகைய அவலங்கள் தொடரவே செய்யும். மக்களின் இந்த கையேந்தும்
நிலையால் தான், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் கூட, 'ஓசி
கிராக்கி'கள் என்று கிண்டலடிக்கின்றனர்.
இந்த சம்பவத்தை ஒரு
பாடமாக்கி, தனியார் மற்றும் அரசு சார்பில், இலவசங்கள் வழங்குவதை
செயல்படுத்தும் போது, சில விதிமுறைகளை பின்பற்றுவதை, அரசு கட்டாயமாக்க
வேண்டும்; அப்போது தான், இது போன்ற கோர நிகழ்வுகளை தவிர்க்க முடியும்.
ஒருவர்,
௫௦க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, இலவசமாக பொருட்கள், உணவு, உடைகள் வழங்க
முன் வந்தால், அவர் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறுவதை கட்டாயமாக்குவதோடு,
மூன்றாம் நபர் காப்பீடு எடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
இலவசங்கள்
பெறுவதற்கான டோக்கன்களை, ஒரு வாரத்திற்கு முன்னரே பொதுமக்களுக்கு
வினியோகம் செய்து, அந்த டோக்கன் வரிசைப்படி, குறிப்பிட்ட தேதி மற்றும்
நேரத்திற்கு வருவோருக்கு மட்டுமே, பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
பணம்
படைத்த செல்வந்தர்கள், தங்களின் பகட்டை வெளிப்படுத்த, சேவை என்ற பெயரில்
இலவசங்கள் வழங்குவதால், ஒரே நேரத்தில் அதிக நபர்கள் கூடி விபத்து
நேரிடுகிறது.
'கடிவாளம் இல்லாத குதிரை போல' செல்வந்தர்களின் கட்டுப்பாடற்ற இலவச விளம்பர மோகத்தால் தான், இத்தகைய சோக சம்பவங்கள் நடக்கின்றன.
உயிர்
ஒப்பற்றது; அதன் விலையை மலிவாக்கி, இலவசத்திற்காக அர்ப்பணிப்பது எந்த வகை
நியாயம்? எனவே, இலவசங்கள் வினியோக விஷயத்தில், கடும் விதிமுறைகளை பின்பற்ற
வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழக அரசு இதை கவனிக்குமா?
lll