''அமைச்சர் திறந்து வச்ச ரத்த வங்கி, சும்மா பெயரளவுக்கு தான் செயல்படுதாம் வே...'' என அரட்டையை ஆரம்பித்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன், சேலம் மாவட்டம் ஓமலுார் தாலுகா மருத்துவமனையில, புதுசா ரத்த வங்கியை சமீபத்துல திறந்து வச்சாருல்லா...
''இந்த ரத்த வங்கியில, ரத்தத்தை இருப்பு வச்சு மட்டும் தான் பயன்படுத்த முடியுமாம்... 'நான் ரத்தம் கொடுக்குதேன்'னு யாராவது முன்வந்தா, அவங்ககிட்ட ரத்தத்தை தானமா பெற்று பயன்படுத்தும் வசதி வரல வே...
''அந்த வசதிக்கு விண்ணப்பிச்சு, 15 நாள் தான் ஆகுது... அதோட ரத்த வங்கியில வேலை பாக்குற டாக்டர், ரெண்டு நர்ஸ்களுக்கு இன்னும் பயிற்சி கொடுக்கல வே...
''இப்படி எந்த வேலையுமே முழுசா முடியாத நிலையில தான், அமைச்சர் வந்து அவசர கதியில ரத்த வங்கியை திறந்துவச்சிட்டு போயிட்டாரு...
''இங்கன ரத்த தான முகாம் நடத்தி, ரத்தத்தை சேமிச்சு வச்சு பயன்படுத்தும் நிலைக்கு, இந்த ரத்த வங்கி எப்ப வருமுன்னு அங்க வேலை பார்க்குற டாக்டர்களுக்கே தெரியல வே...'' என்றார் அண்ணாச்சி.
''நடிகர்கள் விஜய், அஜித் படங்கள் நள்ளிரவில் வெளியாக காரணமா இருந்தவங்க மேல, பெரிய இடத்து குடும்பம் கடுப்புல இருக்குது பா...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''விவகாரம், 'சீரியஸ்' ஆயிடுத்தோ...'' எனக்கேட்டார் குப்பண்ணா.
''பொங்கலுக்கு, விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் நள்ளிரவு காட்சிகளா வெளியாச்சே, ஞாபகம் இருக்குதா... அதை நள்ளிரவில் வெளியிட்டு கொள்ளை லாபம் சம்பாதிச்சவங்க மேல, லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க சொல்லி, கவர்னர் ரவியிடம், 'சவுக்கு' சங்கர் புகார் மனு கொடுத்தாரு பா...
''இந்தப் புகார், மத்திய உள்துறை அமைச்சகம் வரை போயிடுச்சு... இப்ப மாவட்ட கலெக்டரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்குது... சிறப்பு காட்சிகளுக்கு தடை இருந்தும், பெரிய குடும்பத்துக்கு நெருக்கமான தென்மாவட்ட தொழிலதிபர் தான், பல தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளை போட சொல்லி இருக்காரு...
''அந்த தொழிலதிபரின் வாரிசும், பெரிய குடும்பத்துக்கு சொந்தமான சினிமா கம்பெனியில முக்கிய பொறுப்புல இருக்காரு... வாரிசின் கண் அசைவின்படி தான் சினிமா நிறுவனம் இயங்குது பா...
''இனிமே சினிமா உள்ளிட்ட எந்த தொழிலா இருந்தாலும், தென்மாவட்ட தொழிலதிபரும், அவரது மகனும் சொல்லுற யோசனையை கேட்பதற்கு முன்னால, பின்விளைவுகளை அலசி ஆராய பெரிய குடும்பம் முடிவு செஞ்சிருக்குது பா...'' என்ற அன்வர்பாய், ''வாங்க சங்கர் சார்... அர்ஜுன் வரலியா இன்னிக்கு...'' என, நண்பருடன் பேச்சு கொடுத்தார்.
''அமைச்சர்களின் ஆட்கள், அதிகாரிகளை தரக்குறைவா நடத்தறாளாம் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள் அத்தனை பேருமே, சமூக வலைதளங்கள்ல தனித்தனியா கணக்கு வச்சிண்டு இருக்கா... அவா கலந்துக்கற அரசு விழா, கட்சி நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள், புகைப்படங்களை இதுல போட்டுடறா...
''இந்த வேலையை செய்யறதுக்காகவே, ஒவ்வொரு அமைச்சரும் தனியா, 'ஐ.டி., விங்' வச்சிருக்கா... இந்த தகவல் தொழில்நுட்பத்துறை இளைஞர்கள் அமைச்சர்களின் நிகழ்ச்சிகள் குறித்து, துறை அதிகாரிகளிடம் கேட்டு தகவல் தெரிஞ்சுப்பா...
''அவா விபரங்களை சரியா கொடுத்தாலும், 'ஐ.டி., விங்' இளைஞர்கள் ஏதாவது குத்தம் குறை சொல்லி, வாய்க்கு வந்தபடி திட்டி, தரக்குறைவா பேசறாளாம்...
''நொந்து போன அதிகாரிகள் இது சம்பந்தமா, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிவரை விஷயத்தை எடுத்துண்டு போயிட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.