வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காங்கேயம்:சிவன்மலை தைப்பூச தேர்திருவிழாவை முன்னிட்டு காங்கேயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றம் சார்பாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சிவன்மலை தைப்பூச தேர்திருவிழாவை முன்னிட்டு, காங்கேயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றம் சார்பாக சிவன்மலையில் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய திடலில் 75 பெண்கள் கலந்து கொண்டு ஆடிய ஒயிலாட்டம் நிகழ்ச்சியும், ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு ஆடிய பெருஞ்சலங்கையாட்டமும் நடைபெற்றது.
இதை தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஈரோடு எம்.பி., அ.கணேசமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக வண்ணமயில் கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டலக்குழு தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இதில் 55 பேர் கலந்து கொண்டு வண்ணமயில் கும்மியாட்டம் அரங்கேற்றம் செய்தனர். சிறு வயது குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்ச்சியை காங்கேயத்தில் 80 க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே நடத்தி வரும் காங்கேயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.