கேம்பர்வேனில் இந்தியா முழுக்க சென்று வந்த ரோஹன்: எங்களின் சொந்த ஊர், கும்பகோணம் அருகேயுள்ள துஹிலி கிராமம். அம்மா எப்போ கல்யாணம் முடிந்து, அப்பா வீட்டுக்கு வந்தாங்களோ, அப்போது முதல் தினமும் உழைத்துக் கொண்டு தான் இருக்காங்க.
நாங்கள் பரம்பரையாக, கைத்தறி தொழிலில் ஈடுபட்டிருந்தோம். அப்பா இருந்தாலும், அம்மா தலையில தான், எல்லா பொறுப்பும் விழுந்தது. காலையில், 6:00 மணிக்கு துவங்கி இரவு, 11:00 மணி வரை வேலை செய்வாங்க.
என்னையும், அக்காவையும் நன்றாக வளர்த்தாங்க. அம்மாவுக்கு, லீவும், ஓய்வும் கிடையாது. ஒரு நல்ல வேலைக்கு போய், அம்மாவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
அம்மா எங்களுக்காக, பல தியாகங்கள் பண்ணியிருக்காங்க. பல கனவுகளை இழந்திருக்காங்க. அவங்க இழந்ததை எல்லாம், என்னால் மொத்தமாக திருப்பிக் கொடுக்க முடியாது. ஆனாலும், முடிந்த அளவுக்கு, அவங்களோட சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற நினைத்தேன்.
அம்மாவை இரண்டு மாத பயணத்துக்கு மனதளவில் தயார்படுத்தினேன். எல்லா வசதிகளும் கொண்ட வேன் ஒன்றை தயார் செய்ய நினைத்தேன். புதிதாக கேரவன் வாங்க, பல லட்சம் ரூபாய் செலவாகும்.
அதனால், ஒரு பழைய மினி வேனை எடுத்து, அதை எங்களுக்கு தேவைப்படுகிற மாதிரி, 'ரீமாடல்' செய்தேன். முதலில், எனக்கு கார் ஓட்டவே தெரியாது. ஆனாலும், 16 நாளில், இந்த வண்டியை ஓட்டக் கத்துக்கிட்டேன்.
நான் ஏற்கனவே துவக்கியிருந்த, 'யு - டியூப்' சேனலில், டிராவல் வண்டி தயார் பண்ணறது துவங்கி, முழு வீடியோவையும் பதிவிட்டேன்; நல்ல வரவேற்பு கிடைத்தது. எல்லாரும் எங்களின் பயணத்தையும் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதனால், எங்களின் பயண அனுபவங்கள் முழுவதையும், 'யு - டியூப்'பில் பதிவிட்டேன். என், 'யு - டியூப்' சேனல், தற்போது, ஒன்பது லட்சம் பார்வையாளர்களை தொட்டு விட்டது மகிழ்ச்சியாக உள்ளது.
ரோஹனின் தாய் கஸ்துாரி: நாடு முழுவதையும், நான் ரோடு வழியாகத் தான் சுத்திப் பார்க்கப் போறோன்னு நினைத்தேன்.
ஆனால், நடுவில் என் பையன் என்னை தனி விமானத்தில் கூட்டிட்டுப் போய், சந்தோஷப்படுத்தி விட்டான். அடுத்து மும்பையில், தாஜ் ஹோட்டலில் அறை எடுத்து, எனக்கு வியப்பை தந்தான்.
சுட்டெரிக்கும் ராஜஸ்தான்; பனியில் உறைஞ்சிருக்கும் காஷ்மீரின் லடாக்னு, 18 மாநிலங்கள் போனோம். வெறும் திரைப்படங்களில் பார்த்த இடங்களை நேரில் பார்ப்போம் என்று, நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
எனக்கு வயதாகி விட்டாலும், நதியில் குதித்து நீச்சலடித்தேன். கூடாரத்தில் துாங்கி, காலையில் சூரியன் உதிப்பதை பார்த்தேன்; அருவியில் குளித்தேன்.
இதுக்கு மேல என்ன வேணும்! என் எல்லா ஆசைகளையும் என் மகன் நிறைவேற்றி விட்டான்!