ஐ.சி.எப்., மாதவரம், பொன்னியம்மன்பேடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன், 21; உணவு டெலிவரி ஊழியர்.
கடந்த 5ம் தேதி, வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்வதற்காக, இருசக்கர வாகனத்தில் அயனாவரம், கான்ஸ்டேபிள் சாலை - பில்கிங்டன் சாலை சந்திப்பில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபர், விஜயராகவனின் வாகனத்தை உரசியபடி சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கேட்ட போது, அந்த நபர் விஜயராகவனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, 'ஹெல்மெட்'டால் தாக்கி தப்பினார்.
தலையில் படுகாயமடைந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து ஐ.சி.எப்., போலீசார் விசாரித்து, அயனாவரம், மயிலப்பா குறுக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 39, என்பவரை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.