ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், கடந்த இரண்டு தேர்தலில் பெற்ற 60 ஆயிரம் ஓட்டுகளுடன் கூடுதலாக, 20 ஆயிரம் ஓட்டுகளுக்கு இலக்கு வைத்து தேர்தல் பணியாற்ற, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., 69 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது. 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 64 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா., 58 ஆயிரம் ஓட்டுகள் பெற்று, 9,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.கடந்த மூன்று தேர்தல்களை போல, இடைத்தேர்தலிலும் 60 ஆயிரம் ஓட்டுகளை பெறுவது உறுதி என, அ.தி.மு.க., கருதுகிறது. வெற்றி பெற கூடுதலாக, 20 ஆயிரம் ஓட்டுகளை பெற்றால் போதும் என்றும் கருதுகிறது.
அதில் தனிக் கவனம் செலுத்த, அ.தி.மு.க., தேர்தல் பணிக்குழு திட்டமிட்டுள்ளது. அதையடுத்து, தொகுதியில் விசைத்தறி தொழில் நலிவடையும் வகையில், மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஓட்டுகளை மொத்தமாக பெற, விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளுடன், அ.தி.மு.க., தேர்தல் பணிக் குழு பேச்சு நடத்தி உள்ளது.
திருமா மீது கமல் புகார்
தி.மு.க., கூட்டணியில் கமல் இணைந்தது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேட்டபோது, 'கமல் இணைந்தது, ஓட்டு வங்கிக்கு வலுசேர்க்கும் என, நான் கருதவில்லை. நாங்கள் பேசுகிற கருத்தியலுக்கு வலுசேர்க்கும்' என கூறியுள்ளார்.
அவரது கருத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர், தி.மு.க., மேலிடத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர் -