சென்னை: புற்றுநோய் சிகிச்சையில் முன்னோடியாக இருக்கும் ஜப்பான் மருத்துவ முறைகள் குறித்து, அந்நாட்டு டாக்டர்களுடன், தமிழக அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில், உலகிலேயே ஜப்பான் முன்னோடியாக உள்ளது. ஜப்பானில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள், சிகிச்சை முறைகள் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்து வருகின்றன.
இது தொடர்பான விபரங்களை அறிவதற்காக, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை அழைப்பின்படி, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர், ஐந்து நாள் அரசு முறை பயணமாக, நேற்று முன்தினம் ஜப்பான் சென்றனர்.
அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் யசுமாசா புகுஷிமா தலைமையில், 'புற்றுநோயை கட்டுப்படுத்துதல்' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், தமிழக அமைச்சர் சுப்பிரமணியன், செயலர் செந்தில் குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுகாதார திட்ட இயக்குனர் உமா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புற்றுநோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது, அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக, ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை அலுவலகத்தில், அதன் துணை தலைவர் சச்சிகோ இமோட்டோ, முதுநிலை துணை இயக்குனர் ஜெனரல் டோமோயோ யோஷிடா ஆகியோரை சந்தித்து, 'ஜிகா' நிதியின் கீழ், தமிழக அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும் ஆலோசித்தனர்.