'எந்த திட்டங்களாக இருந்தாலும், மத்திய அரசு அதானி நிறுவனத்திற்கே முன்னுரிமை வழங்குவது ஏன்... அவருக்கு ஒப்பந்தங்களை வழங்க வேண்டுமென்பதற்காகவே, மத்திய அரசு விதிமுறைகளை திருத்துகிறது,'' என லோக்சபாவில் காங்., - எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டினார்.
லோக்சபாவில், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் பங்கேற்று ராகுல் பேசியதாவது:
பாரத ஒற்றுமை யாத்திரையின்போது, மக்களின் பலதரப்பட்ட பிரச்னைகளை கேட்டறிய முடிந்தது. வேலையின்மை பிரச்னை பெரிய அளவில் உள்ளது.
விலைவாசி உயர்வு பற்றியும் மக்கள் பேசுகின்றனர். ஆனால், ஜனாதிபதி உரையில் இந்த வார்த்தைகள் பெயரளவில் கூட இடம்பெறவில்லை.
தற்போது மக்கள் ஒரே ஒரு பெயரைத்தான் அனைத்து மாநிலங்களிலும் உச்சரிக்கின்றனர். திரும்பிய திசையெங்கும் அதானி என்ற பெயரைத் தான் கேட்க முடிகிறது.
யார் இந்த அதானி? கடந்த 2014 முதல் 2022க்குள், ஊடகம், சிமென்ட், எரிசக்தி என முக்கிய துறைகள் அனைத்திலும் கால் பதிக்கவும், பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை சம்பாதிக்கவும் இவரால் எப்படி முடிந்தது.
அதானிக்காக, அரசின் சட்டங்கள் வளைக்கப்பட்டன. விதிமுறைகள் திருத்தப்பட்டன.
முன் அனுபவம் இல்லாத நிலையிலும், பல துறைகளில் அதானிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு துறையில், அதானிக்கு அனுபவமே இல்லை. ஆனாலும், ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன.
பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில், அதானி உடன் வந்தது எத்தனை முறை? நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்ற பின், அவர் உங்களுடன் இணைந்தது எத்தனை முறை? நீங்கள் பயணம் முடித்து திரும்பிய பின், அந்த நாட்டுடன் அதானி போட்ட ஒப்பந்தங்கள் எத்தனை?
இவ்வாறு கூறிவிட்டு, பிரதமரும், அதானியும் விமான பயணத்தில் ஒன்றாக இருக்கும் படத்தையும், பின்புறம் அதானி நிறுவனத்தின் 'லோகோ' இருக்க, பிரதமர் உரையாற்றுவது போல ஒரு படத்தையும் ராகுல் துாக்கிப்பிடித்தார்.
இதனால், சபையில் கூச்சல், குழப்பம் ஏற்படவே, சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுலிடம் போஸ்டர்களை காட்டக் கூடாது என கண்டித்தார். இதனால், சபையில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
ஜனாதிபதி உரை மீதான விவாதத்தை பா.ஜ., - எம்.பி., ஜோஷி துவக்கி வைத்துப் பேசியபோது, சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் செயலை புனிதப்படுத்தும் வகையில் பேசினார். அப்போது, எதிர்க்கட்சி வரிசையிலிருந்து தி.மு.க. - எம்.பி., ராஜா, ஜோஷியின் இருக்கை அருகே ஓடிச் சென்று கடுமையாக கண்டிக்கவே, பரபரப்பு ஏற்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது. பின், சபை கூடியதும், சபாநாயர் ஓம்பிர்லா கண்டித்ததை அடுத்து, ராஜா பேசுகையில், ''சில விஷயங்கள் சமூகத்திற்கு எதிரானவை; மனிதகுலத்திற்கே கேடானவை. அவற்றை இதுபோலத்தான் கண்டிக்க வேண்டியுள்ளது,'' என்றார்.
தி.மு.க., சார்பில் கனிமொழி எம்.பி., பேசியதாவது:'ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே கட்சி' என ஒற்றைக் கலாசாரத்தை திணிக்கப் பார்க்கின்றனர். இது பலிக்கவே பலிக்காது. தமிழக கவர்னர், 20 மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளது குற்றம். மத்திய அரசு, பா.ஜ., அல்லாத மாநில அரசுகளை கவர்னரை வைத்து மிரட்டுகிறது. பா.ஜ., அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கவில்லை; தமிழக ரயில்வே திட்டங்களுக்கும் நிதி தரவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
- நமது டில்லி நிருபர் -