காரைக்கால், : சிவன் கோவிலில் 60 ஆண்டிற்கு முன் திருடு போன இருண்டு சிலைகளை மீட்டு தரக்கோரி அர்ச்சகர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் நெடுங்காடு பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சட்டநாத குருக்கள்,90. இவர், நெடுங்காடு காமராஜர் சாலையில் உள்ள பழமை வாய்ந்த தான்தோன்றிஸ்வரர் சிவன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்தார்.
இவர், நேற்று முன்தினம் நெடுங்காடு போலீசில் புகார் அளித்தார்.
அதில், கடந்த 1959ம் ஆண்டு, தான்தோன்றீஸ்வரர் கோவிலில் இருந்த நடராஜர், சிவகாமிசுந்தரி மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகள் திருடு போனது. அதில் நடராஜர் சிலை வாஞ்சியாற்றில் கிடைத்தது. மற்ற இரு சிலைகள் கிடைக்கவில்லை.
இவ்விரு சிலைகளும், ஜெர்மன் நாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, திருடு போன சிலைகளை மீட்டு தரக்கோரி இருந்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.