அரியாங்குப்பம், : அரியாங்குப்பத்தில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பம் மாஞ்சாலை, தபால்காரர் வீதியை சேர்ந்தவர் சதாசிவம் மகன் பிரவின்,19; இவர் நேற்று முன்தினம் இரவு வீராம்பட்டிணம் சாலையில் நடந்து சென்றபோது ஒரு கும்பல் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
இதுகுறித்து பிரவின் தாய் விஜயலட்சுமி, அரியாங்குப்பம் போலீசில் அளித்த புகாரில், கடந்த 2019ம் ஆண்டு சுப்பையா நகர் பாண்டியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எனது மகன், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.
அவரிடம், பாண்டியன் தரப்பினர் தகராறு செய்து வந்தனர். பாண்டியனின் ஆதரவாளர் ஆகாஷிற்கும், எனது மகனுக்கும் இடையே ஜிப்மர் மருத்துவமனை மற்றும் வீராம்பட்டிணம் பாரில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், எனது மகனை முடிக்காமல் விடமாட்டோம் என ஆகாஷ் தரப்பினர் கடந்த வாரம் என் வீட்டிற்கு வந்து சொல்லிவிட்டு சென்றனர்.
அதன்படி நேற்று முன்தினம் ஆகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து எனது மகனை கொலை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில், அரியாங்குப்பம் போலீசார் கொலை வழக்கு பதிந்து, ஆகாஷ் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.