சென்னை :தனி சின்னத்தில் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபித்து, பன்னீர்செல்வத்தை நிரந்தரமாக ஓரங்கட்ட நினைத்திருந்த பழனிசாமியின் திட்டத்தை பா.ஜ., முறியடித்து விட்டதாக, அ.தி.மு.க.,வினர்
தெரிவிக்கின்றனர்.கடந்த ஆண்டு ஜூனில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், தன் ஆதரவாளர் தர்மருக்கு, ஒரு எம்.பி., பதவியை, பன்னீர்செல்வம் விடாப்பிடியாக பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்; பன்னீர்செல்வம் தனியாக செயல்பட்டு வருகிறார்.
இருவரும் அ.தி.மு.க.,வுக்கு உரிமை கோரவே, வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
![]()
|
முயற்சி
இந்நிலையில்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மறைவால் காலியான, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, வரும் 27-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. 2021 சட்டசபை தேர்தலில் இங்கு, த.மா.கா., சார்பில் யுவராஜா, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அதனால், அவரையே மீண்டும் போட்டியிட வைக்க, பா.ஜ., முயற்சி மேற்கொண்டது. இரட்டை இலை கிடைக்காவிட்டால், தாமரை சின்னத்தில் போட்டியிடலாம் என்றும், பா.ஜ., ஆலோசனை கூறியது.
இதை ஏற்க மறுத்த பழனிசாமி, த.மா.கா., தலைவர் வாசனிடம் பேசி, அவர் வாயிலாகவே ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க., போட்டியிடும் என, அறிவிக்க வைத்து விட்டார்.'எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், 1989-ல் நடந்த சட்டசபை தேர்தலில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு, தன் செல்வாக்கை நிரூபித்த ஜெயலலிதா நிரூபித்தார். அதன் பின், கட்சி அவர் வசமானது.
வலியுறுத்தல்
'அதுபோல, இந்த இடைத்தேர்தல் பழனிசாமிக்கு வாய்ப்பாக அமைந்தது. தனி சின்னத்தில் போட்டியிட்டு, இரண்டாவது இடத்தை பிடித்தாலே அ.தி.மு.க., அவர் வசமாகி விடும். அதனால்தான் போட்டியிடுவதில் விடாப்பிடியாக இருந்தார்' என்கின்றனர், அவரது ஆதரவாளர்கள்.பழனிசாமியின் திட்டத்தை அறிந்த பா.ஜ., மேலிடம், ஈரோடு கிழக்கில் தனி சின்னத்தில் போட்டியிட்டு செல்வாக்கை நிரூபித்தால், 2024 லோக்சபா தேர்தலில், அவர் கொடுக்கும் இடங்களைத் தான் வாங்க வேண்டிய நிலை வரும். இதை தவிர்க்க, இரு தரப்பையும் சமாதானப்படுத்த, தொடர் முயற்சிகளை மேற்கொண்டது. பா.ஜ., தேசிய பொதுச்செயலர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரையும் நேரில் சந்தித்து, ஒற்றுமையுடன் செயல்பட வலியுறுத்தினர். அப்படியும் பழனிசாமி உடன்படவில்லை.
ஆனால், அ.தி.மு.க., வேட்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தன் வேட்பாளரை பன்னீர்செல்வம் வாபஸ் பெற்றார். இதனால், பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுவுக்கு, இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது.
முறியடிப்பு
இது பழனிசாமிக்கு கிடைத்த வெற்றியாக பலர் கருதினாலும், ஜெயலலிதா போல செல்வாக்கை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை, பா.ஜ., முறியடித்து விட்டதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இரட்டை இலை சின்னம் என்பதால், ஈரோடு கிழக்கில் வெற்றியே பெற்றாலும், அது, அ.தி.மு.க., வெற்றியாகத் தான் பார்க்கப்படும். தனக்கு கிடைத்த வெற்றியாக பழனிசாமி கூற முடியாது. தான் வேட்பாளரை வாபஸ் பெற்றதால் தான், அ.தி.மு.க.,வுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன என, பன்னீர் செல்வமும் உரிமை கோருவார்.இதனால், உட்கட்சி பிரச்னை நீடித்துக் கொண்டே இருக்கும். இதனால், பா.ஜ., மீது பழனிசாமி கோபத்தில் இருப்பதாக, அவரது
ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.