உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
கே.மணிவண்ணன், கோவையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:'அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் தான், கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்தை எதிர்க்கின்றனர்' என்று, திருவாய் மலர்ந்திருக்கிறார், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி.
அத்துடன், 'தன் வாழ்நாள் முழுதும், தமிழ் சமுதாயத்திற்காக, அயராது பாடுபட்டவர் கருணாநிதி. எழுத்து மற்றும் பேச்சின் வாயிலாக, ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவர் அவர்' என்றும்,தி.மு.க., தொண்டனை மிஞ்சும் அளவிற்கு, கூவி இருக்கிறார்.
அந்த அழகிரிக்கு சில கேள்விகள்...
* 1977 - 1987 வரை, எம்.ஜி.ஆர்., முதல்வராக பதவி வகித்த காலத்தில், தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றியவர் கருணாநிதி. ஆனால், அந்தப் போராட்டங்களில் ஒன்று கூட மக்களுக்கானதல்ல; இது, எம்.ஜி.ஆருக்கு எதிராக, கருணாநிதி பின்பற்றியகாழ்ப்புணர்ச்சியா, இல்லையா?
* தமிழர்களை தன் பிரித்தாளும் சூழ்ச்சியால் பிரித்து வைத்தது... ஜி.கே.மூப்பனார் பிரதமராவதை தடுத்தது... 2009-ல் இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க, காங்கிரஸ் கட்சிக்கு துணை போனது... இதெல்லாம், தமிழ் சமுதாயத்திற்கு அவர் அயராது பாடுபட்ட செயல்களா?
![]()
|
* 1969-ல் அண்ணாதுரை மறைந்த போது, எம்.ஜி.ஆர்., தயவால் முதல்வரானார் கருணாநிதி.
பின், 1972ல் நடந்த சட்டசபை தேர்தலில், பட்டி தொட்டி எல்லாம் பிரசாரம் செய்து, அவரை மீண்டும் முதல்வராக்கினார் எம்.ஜி.ஆர்., அழகிரி சொல்வது போல எழுத்து மற்றும் பேச்சாற்றலால் முதல்வரானார் என்றால், 1977 -1987 வரை கருணாநிதி ஏன் முதல்வராக வில்லை?
* கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால், மக்களுக்கு என்ன பயன் என்று, விஞ்ஞானி அழகிரி கூறுவாரா?
மொத்தத்தில், தி.மு.க.,வினரை விட, ஸ்டாலினுக்கு அதிகமாக துதிபாடுகிறார் அழகிரி. ஒரு வேளை, காங்கிரஸ் இவரை கழற்றி விட்டால், தி.மு.க.,வில் வாரிய பதவிக்குதுண்டு போடுகிறாரோ என்னவோ... இவர் தன் அறிக்கை வாயிலாக, தி.மு.க.,வின், 'சொம்பு துாக்கி' என்று நிரூபித்துள்ளார்; வாழ்க... வளர்க... அழகிரியின் தொண்டு!