வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பேரூர்: ''பழநி உள்ளிட்ட முக்கிய கோவில்களில் அனைத்து வசதிகளையும் மேம்படுத்த 'மாஸ்டர் பிளான்' தயார் செய்யப்பட்டு வருகிறது,'' என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்களுக்கு, சிவதீட்சை வழங்கும் நிகழ்ச்சி, கோவை மாவட்டம், பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நேற்று நடந்தது. இதில், 85 மாணவர்களுக்கு பேரூராதீனம் மருதாச்சல அடிகளார் சிவதீட்சை அளித்தார். தொடர்ந்து, 85 மாணவர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிவதீட்சை வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கினார்.
நிறைவில், அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அர்ச்சகர், ஓதுவார், நாதஸ்வரம், தவில் உட்பட ஐந்து நிலையில் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, 15 பயிற்சி பள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் பயிற்சி முடித்த, 85 மாணவர்களுக்கு தீட்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 27 கோவில்களில், 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
![]()
|
முதற்கட்டமாக பழநி கோவிலில் வசதிகளை மேம்படுத்த 'மாஸ்டர் பிளான்' தயார் செய்யப்பட்டு வருகிறது; விரைவில்பணிகள் துவங்கப்படும். அனைத்து கோவில்களிலும் விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் உள்ள கோவில்களின் வருவாய் மற்றும் செலவுகள் ஆராயப்பட்டு, சிறப்பு கட்டணங்கள் குறைக்கப்படும். தமிழகத்தில் ஐந்து கோவில்களில் மஹா சிவராத்திரி விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் ஹரிப்பிரியா, இணை கமிஷனர் பரஞ்சோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.