மதுரை : மதுரை நகர் பா.ஜ., 21 மண்டல் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு கட்சியினரிடையே குமுறலை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.,வில் கிளை நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் ஜன.29ல் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதன் பின் தலைமை நிர்வாகம் 2 நாட்களில் மண்டல்களின் தலைவர்கள் உட்பட நிர்வாகிகளை புதிதாக அறிவித்தது. இதில் முறைப்படி கிளை நிர்வாகிகளின் ஆதரவு பெற்றோரை நியமிக்காமல், மாவட்ட நிர்வாகிகளுக்கு வேண்டியவர்களை நியமித்துள்ளதாக குமுறல் எழுந்துள்ளது.
ஒவ்வொரு மண்டலிலும் அதிகளவு பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்தோருக்கு பதவி வழங்கப்படவில்லை. மேலும் கட்சியைவிட்டு நீக்கப்பட்ட டாக்டர் சரவணன் நியமித்த மாவட்ட மையக்குழுவே நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளது. புதிய நிர்வாகிகளில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதுஎன்பன போன்ற குமுறல் எழுந்துள்ளது.
கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
மண்டல் நிர்வாகிகள் நியமனத்தை மையக்குழுவே செய்ய வேண்டும். கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் உருவாக்கிய மையக்குழுவை ரத்து செய்ய வேண்டும். பதிலாக பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், அமைப்புச் செயலாளர் சுப.நாகராஜ், மாவட்ட தலைவர் சுசீந்திரன், பார்வையாளர் கார்த்திக்பிரபு, முன்னாள் தலைவர் கே.கே.ஸ்ரீனிவாசன் போன்றோரைக் கொண்ட மையக்குழு உருவாக்கப்பட வேண்டும். அக்குழுவின் ஒப்புதல் பெற்ற நிர்வாகிகளை அறிவிக்க வேண்டும், என்றனர்.