வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் முறையாக பின்பற்றியே அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக எல்.ஐ.சி., எனப்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளதாக, ராஜ்யசபாவில்தெரிவிக்கப்பட்டது.
அதானி குழுமம் பங்குச் சந்தை வர்த்தகத்தில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங் குகளின் மதிப்பு கடுமையாக சரிந்தது.
இந்நிலையில், எல்.ஐ.சி., எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், அதானி குழுமத்தில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாகவும், அது பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'எல்.ஐ.சி.,யின் மொத்த சொத்து மதிப்பு 41.66 லட்சம் கோடி ரூபாயாகும். இதில், 35 ஆயிரத்து 917 கோடி ரூபாய், அதாவது 0.975 சதவீதம் மட்டுமே அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது' என, எல்.ஐ.சி., தெரிவித்திருந்தது.
![]()
|
இது தொடர்பாக பா.ஜ.,வைச் சேர்ந்த சுஷில் குமார் மோடி கேட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கராட், ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக நேற்று தாக்கல் செய்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
காப்பீட்டு சட்டம், காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணைய வழி காட்டுதல்கள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக நடைமுறைகள் முறையாக பின்பற்றியே, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப் படுவதாக எல்.ஐ.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.
தன் முதலீடுகள் தொடர்பாக நிறுவனத்தின் இணையதளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் எல்.ஐ.சி., குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.