சென்னை : தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில், பயணியருக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, இதுவரையில் இல்லாத வகையில், 1,081 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
வரும், 2023 - 24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், தமிழகம், கேரளா உள்ளடக்கிய தெற்கு ரயில்வேக்கு மொத்தம், 6,080 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அடிப்படை வசதிகள்
இதில், ரயில் நிலையங்கள் மேம்பாடு, பயணியர் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மட்டும் எப்போதும் இல்லாத வகையில், 1,081 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இது கடந்த, 2019 - 20ல், 262.22 கோடி ரூபாய்; 2020 - 21ல், 198.11 கோடி ரூபாய்; 2021 - 22ல், 225.57 கோடி ரூபாய்; 2022 - 23ல், 327.77 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதன்படி, தமிழகத்தில், 59 ரயில் நிலையங்கள் உட்பட, தெற்கு ரயில்வேயில், 90 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
![]()
|
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் பயணியருக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த, தெற்கு ரயில்வேக்கு மட்டும், 11 ஆயிரத்து, 314 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுவே, 2009 - 2014ம் ஆண்டுகளில் ஒதுக்கிய தொகையை ஒப்பிடுகையில், பல மடங்கு அதிகம்.
ரயில் நிலையங்களில், பயணியருக்கான அடிப்படை வசதி மேம்பாட்டிற்கு, இதற்கு முந்தைய பட்ஜெட்டை ஒப்பிடுகையில், 230 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
புதுப்பிப்பு
முக்கிய ரயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்துவது, அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்கள் புதுப்பிப்பது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.
ரயில் நிலையங்களில் ஏற்கனவே உள்ள வசதிகளுக்கு மாற்றாக, புதிய வசதிகள் செய்து தரப்படும்.
தகவல் பலகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், பயணியர் தங்கும் அறை, நடைமேடைகள், கழிப்பிடம், ஓய்வு அறைகள், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், அதிகாரிகள் ஆய்வு அறை, லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் கிண்டி, மாம்பலம், சென்னை கடற்கரை, சென்னை பூங்கா, பெரம்பூர், அம்பத்துார், திருவள்ளுர், பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், ஊட்டி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்குடி, பரமக்குடி.
திருச்செந்துார், தென்காசி, மணப்பாறை, பழநி, விருதுநகர், கோவில்பட்டி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், காரைக்கால், மன்னார்குடி, சிதம்பரம், அரியலுார், திருவரங்கம், திருவண்ணாமலை, விருத்தாசலம், வேலுார் கன்டோன்மென்ட் உட்பட மொத்தம், 59 ரயில் நிலையங்கள் படிப்படியாக மேம்படுத்த உள்ளன.