வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
'2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முடிந்துவிட்டதாக கூற முடியாது. இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்' என பார்லி.,யில் அ.தி.மு.க., கூறியதால் தி.மு.க., எம்.பி.,க்கள் கொந்தளித்து அமளி ஏற்பட்டது.
ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின் மீது, ராஜ்யசபாவில், அ.தி.மு.க., மூத்த எம்.பி., தம்பித்துரை பேசுகையில், ''வாரிசு அரசியலும் ஊழலும் பின்னிப் பிணைந்தது. தற்போது தொழிலதிபர்களை ஊழல்வாதிகள் என குற்றம்சாட்டுவது வாடிக்கையாகிவிட்டது. ''ஆனால் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை, யாரும் மறக்க முடியாது,'' என குறிப்பிட்டார்.
இதை கேட்டதும் தி.மு.க., - எம்.பி.,க்கள் கொதித்துப்போயினர். 'இந்த விவகாரம் பற்றி இங்கு பேசக்கூடாது. தீர்ப்பு வெளியாகி முடிந்து போன விஷயம். இதை இங்கு எப்படி கிளப்பலாம்' என எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
இதையடுத்து எழுந்த வாக்குவாதத்தை அடுத்து சபைத் தலைவர் ஜக்தீப் தன்கர் குறுக்கிட்டு,''கோர்ட் விவகாரங்களை பேசும்போது கவனமாக பேச வேண்டும். சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
![]()
|
இதைத் தொடர்ந்து தம்பித்துரை மீண்டும் பேசியதாவது: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முடிந்துவிட்டதாக கூற முடியாது. இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். இவ்வாறு கூறுவதில் என்ன தவறு.
பொங்கல் பண்டிகையின் போது அ.தி.மு.க., ஆட்சியில், 2,500 ரூபாய் தரப்பட்டது. ஆனால், அது தற்போது 1000 ரூபாயாக குறைக்கப்பட்டது. பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக கூறிய தி.மு.க., அரசு இதையும் செய்யத் தவறிவிட்டது. ஜி.எஸ்.டி., வரியால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
இதை கொண்டு வந்தது யார்... பா.ஜ., அல்ல. இதேபோல நீட் தேர்வு கொண்டுவந்தது யார்... பா.ஜ., அல்ல. இந்த அநியாயங்களை தி.மு.க., அங்கம் வகித்த முந்தைய ஐ.மு.,கூட்டணி அரசுதான் செய்தது என்பதை யாரும் மறக்க மாட்டர். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -