திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 'ஆசாதி சாட் 2' செயற்கைக்கோளில் பயன்படுத்துவதற்கான 'பேலோட்' என்ற கம்ப்யூட்டர் சிப்பை 2வது முறையாக தயாரித்து அளித்துள்ளனர்.
இப்பள்ளி மாணவிகள் சென்னை 'ஸ்பேஸ் கிட்ஸ்' இந்தியா நிறுவனத்துடன் இணைந்து கடந்தாண்டு ஆகஸ்டில் 'ஆசாதி சாட்-1' என்ற செயற்கைக்கோள் பாகத்தை தயாரித்தனர். அது எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. ராக்கெட் வழிமாறியதால் செயற்கைக்கோளை அனுப்ப இயலவில்லை.
இந்தாண்டு அதே நிறுவனத்துடன் இணைந்து 'ஆசாதி சாட்-2' தயாரிக்கும் பணியில் இந்தியாவில் உள்ள 75 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். அதில் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பிருந்தா, அத்ஷாராணி, தேன்மொழி, ஐஸ்வர்யா, குகப்பிரியா, கவுரி, நந்தினி, விஷாலினி, ஜெயஸ்ரீ, பவதாரணி இணைந்து 50 கிராம் எடையுள்ள 'பேலோட்' ஐ வெற்றிகரமாக தயார் செய்து இஸ்ரோவிற்கு அனுப்பினர்.
அந்தப் 'பேலோடு' ஆசாதி சாட்- 2வில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் பிப்.,10ல் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்த்து ஏவப்பட உள்ளது.
தலைமையாசிரியர் கர்ணன், அறிவியல் ஆசிரியர் சிந்தியா ஏற்பாட்டில் மாணவியர் இம்முயற்சியில் ஈடுபட்டனர்.
இவர்களை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர் முரளி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராமன், மேலாண்மை குழுத் தலைவர் ஸ்ரீதேவி, உதவி தலைமை ஆசிரியர்கள் வெங்கடேஸ்வரி, ரகுபதி பாராட்டினர். இம்மாணவிகள் பிப்.,10ல் செயற்கைக்கோள் ஏவும் நிகழ்ச்சியை நேரில் பார்க்கவும் உள்ளனர்.