வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : அதிகாரிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் கூட்டணியால், ஆவினில் நெய் மற்றும் வெண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஆவினில் பாலுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு, 12 ரூபாய் அதிகரித்தாலும், கொள்முதல் விலை உயர்வால், உற்பத்தி செலவில் இரண்டு ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இதனால், ஆவின் நெய், வெண்ணெய் தயாரிப்பு குறைந்துள்ளது. உற்பத்தியாகும் நெய், வெண்ணெய் ஆகியவற்றை மொத்த வியாபாரிகள் வாங்கி, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு விற்று வருகின்றனர். இதனால், பாலகங்களில் நெய், வெண்ணெய் தட்டுப்பாடு தொடர்கிறது.
![]()
|
மொத்த விற்பனையாளர்களுடன், ஆவின் விற்பனைப் பிரிவு அதிகாரிகள் கைகோர்த்து, லாபம் பார்த்து வருகின்றனர். துறையின் முக்கியப் புள்ளி பரிந்துரைப்படி, இந்த நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கி உள்ளதால், அவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலைக்கு, உயர் அதிகாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.
இதனால், நுகர்வோர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இனியாவது, ஆவின் நெய், வெண்ணெய் உள்ளிட்டவற்றை தட்டுப்பாடின்றி வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
12 மேலாளர் மாற்றம்
சென்னையில் ஆவின் பொருட்கள் விற்பனைக்காக, 21 மண்டல அலுவலகங்கள் உள்ளன. தற்போது, பாலில் கொழுப்பு சத்து குறைவு, எடை குறைவு போன்ற குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், 12 மண்டல மேலாளர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். விற்பனையை அதிகரிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.