பாலக்கோடு : சாலைப்பணியாளரிடம், 4,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் இளநிலை உதவியாளர் ஆகிய இருவரை, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்தவர் சந்திரசேகர், 48; இவர், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக உள்ளார்.
பாலக்கோட்டை அடுத்த தண்டுகாரனஹள்ளியை சேர்ந்த தனபால், 40, இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார்.
அதே அலுவலகத்தில், சாலைப்பணியாளராக பணியாற்றுபவர் அரூரை சேர்ந்த குப்புசாமி, 42; மகள் திருமணத்துக்காக, தன் வருங்கால வைப்புநிதியிலிருந்து கடன் பெற முயன்றார்.
அவரிடம், கண்காணிப்பாளர் சந்திரசேகர், இளநிலை உதவியாளர் தனபால் ஆகியோர், 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் வழங்க விரும்பாத குப்புசாமி, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அப்போது போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய, 4,000 ரூபாயை நேற்று, பாலக்கோடு அலுவலகத்தில் இருந்த, இளநிலை உதவியாளர் தனபாலிடம் குப்புசாமி கொடுத்தார்.
அவர் பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த தர்மபுரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் தனபாலை பிடித்தனர். விசாரணையில், சந்திரசேகர் கூறியதால், குப்புசாமியிடம், லஞ்சம் வாங்கியதாக அவர் கூறினார்; சந்திரசேகரும் அதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து நேற்று மாலை, 6:30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார், சந்திரசேகர் மற்றும் தனபாலை கைது செய்தனர்.