புதுடில்லி: புதுடில்லியில், மதுபான விற்பனையில் தனியாருக்கும் வாய்ப்பு தரும் வகையில், மதுபானக் கொள்கை மாற்றப்பட்டது. இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், கலால் துறையை கவனித்து வந்த புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த முறைகேட்டில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக விசாரணை அமைப்புகள் அவரிடம் விசாரணை நடத்தியிருந்தன. மேலும், இந்த விவகாரத்தில் ஐதராபாத் நிறுவனம் தவறான வழியில் லாபம் அடைய உதவியதாக கவிதாவின் ஆடிட்டராக இருந்த புச்சிபாபு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.