காடையாம்பட்டி: வேட்டைக்கு துப்பாக்கியுடன் வந்தவர்களை பிடிக்க முயன்றபோது தோட்டா வெடித்து சிதறியதில், இரு பைக்குகள் சேதமாகின. ஆனால் இச்சம்பவத்தை மறைத்த வனத்துறையினர், இருவருக்கு அபராதம் விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகாவில் டேனிஷ்பேட்டை வனச்சரகம் உள்ளது. அங்கு காடையாம்பட்டி, தின்னப்பட்டி, தொப்பூர் பிரிவுகள் என, 13 ஆயிரத்து, 418 ெஹக்டேர் காப்புக்காடு உள்ளது. டேனிஷ்பேட்டை வனச்சரகராக தங்கராஜ் உள்பட, வன காப்பாளர், வன காவலர் என, 20க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
கடந்த, 5ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு, தின்னப்பட்டி பிரிவு வெட்டுக்காடு பகுதியில், விலங்குகளை வேட்டையாடும் கும்பலை பிடிக்க, வன காவலர் கண்ணன், உள்ளூரை சேர்ந்த, 5 பேர் உதவியுடன் சென்றார். அப்போது நாட்டு துப்பாக்கியுடன் இரு பைக்கில் வந்த வேட்டை கும்பலை, வனப்பகுதி சாலையில் தடுத்து நிறுத்தி பிடிக்க முயன்றனர்.
அதில் கும்பலுக்கும் வனத்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது துப்பாக்கியிலிருந்து தோட்டா வெடித்து சிதறிய பால்ரஸ் குண்டுகளால், கண்ணனின் ஹீரோ ேஹாண்டா பைக், கும்பலை சேர்ந்த ஒருவரது பைக் சேதமாகின. இதையடுத்து, துப்பாக்கியுடன் மர்ம நபர் ஓட்டம் பிடித்தார்.
மற்ற இருவரை வனத்துறையினர் பிடித்து, அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். அதில் தின்னப்பட்டி சசி, 21, கஞ்சமலை கார்த்தி, 22, என தெரிந்தது. ஆனால், துப்பாக்கி சூடு சம்பவத்தை மறைத்து, பிடிபட்ட இருவர் மீதும், கண்ணி வைத்து வேட்டையாட வந்ததாக வழக்குப்பதிந்து, தலா, 40 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து அனுப்பியுள்ளனர். இந்த நடவடிக்கை வனத்துறை அலுவலர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு வன ஊழியர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.