கடலூர் : கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் அருகே குடும்பத்தோடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் 2 பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் பலியாகினர். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

கடலூர் செல்லங்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரகாஷ். இவரது மனைவி தமிழரசி, இவர்களுக்கு 8 மாத ஹாசினி என்ற கைகுழந்தையும் உள்ளது. இந்நிலையில் தமிழரசியின் தங்கையான தனலட்சுமிக்கு சர்குரு என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் 4 மாத பச்சிளம் குழந்தை உள்ளது.
இவர் இருவருக்கு குடும்ப தகராறு காரணமாக, தனலட்சுமி தனது அக்கா தமிழரசி வீட்டிற்கு இன்று(பிப்.,08) காலை வந்துள்ளார். இதனை அறிந்த தனலட்சுமியின் கணவர் சர்குரு தனது மனைவியிடம் அக்கா வீட்டில் வந்து சண்டை ஏற்படுத்தியுள்ளார். அப்பொழுது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு குடும்பப் பிரச்னை ஆகியுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த சர்குரு அங்கு இருந்த தமிழரசி, தனலட்சுமி தனது 4 மாத குழந்தை மற்றும் தமிழரசியின் 8 மாத குழந்தை, மாமியார் செல்வி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சர்குருவின் 4 மாத பச்சிளம் குழந்தை, தமிழரசி மற்றும் தமிழரசி 8 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாமியார் செல்வி, தீ வைத்த சர்குரு, சர்குருவின் மனைவி தனலட்சுமி உட்பட 3 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வந்த சர்குரு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.