வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ராஜ்யசபாவில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ''நான் உண்மையை பேசினால் தேச விரோதமா?'' என கேள்வி எழுப்பினார். மேலும், அதானி விவகாரத்தில் பிரதமர் மோடியை குற்றம்சாட்டி பேசினார். இதற்கு, பதிலடி கொடுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடிக்கு எதிராக உள்நோக்கத்துடன் தகவல் கொடுக்கப்படுகிறது என பதிலடி கொடுத்தார்.
ராஜ்யசபாவில் மல்லிகார்ஜூனா கார்கே பேசியதாவது: வேறு பிரச்னைகள் கிடைக்காததால், அமைச்சர்களும், எம்.பி.,க்களுக்கும் ஹிந்து முஸ்லிம் என பேசுகின்றனர். கோயிலுக்குள் நுழைந்ததற்காக தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர்கள் ஹிந்துக்கள் என கருதினால், அவர்களை ஏன் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. கல்வியறிவு கொடுக்கவில்லை. ஆனால், அவர்களின் வீட்டிற்குள் சென்று உணவருந்துவது போன்று அமைச்சர்கள் புகைப்படங்களை வெளியிடுகின்றனர்.
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரின் சொத்து மதிப்பு 2.5 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரித்துள்ளது. 2014 ல் ரூ.50 ஆயிரம் கோடியாக இருந்த சொத்து மதிப்பு , 2019 ல் ரூ.1 லட்சம் கோடியாக அதிகரித்தது. ஆனால், என்ன மாயஜாலம் செய்தார் என தெரியவில்லை அவரின் சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய நிர்மலா சீதாராமன், தகவல்களை நாங்கள் தருகிறோம் என சொல்வது மிகவும் புத்திசாலித்தனம். ஆனால், அதனை நாங்கள் உறுதிபடுத்துவோம். அதில், பிரதமர் மோடிக்கு எதிராக முற்றிலும் உள்நோக்கத்துடன் தெரிவித்த கருத்துகள் மட்டுமே உள்ளது. அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அவர்கள் பிரதமரை வெளிப்படையாக அவமதிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு கார்கே பேசுகையில், நான் உண்மையை பேசினால், தேச விரோதியா? நான் தேச விரோதி கிடையாது. இங்கு இருப்பவர்களை விட தேசபக்தி எனக்கு அதிகம். நாட்டை நீங்கள் கொள்ளையடிக்கிறீர்கள். ஆனால், என்னை தேச விரோதி எனக்கூறுகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.