சுற்றுலா என்பது மனதிற்கு இனிமைத் தரக்கூடிய ஒரு சுகமான பயணம்.. என்ன தான் ஆண்டு முழுவதும் வேலைபார்த்தாலும் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு ஒரு ட்ரிப் போவதே ஒரு இனிய அனுபவம்தான். அதிலும் இயற்கை எழில் கொஞ்சம் இடம் என்றால் டபுள் சந்தோஷம்தான். ்ந்த வகையில் பாங்காங் ஏரியைச் சற்றி வரலாம் வாங்க...
![]()
|
இந்தியாவின் லடாக் பகுதியில் உள்ள லே மாவட்டத்தின் கிழக்கில் இந்திய- திபெத் எல்லைப் பகுதியில் பாங்காங் ஏரி அமைந்துள்ளது. பாங்காங் ஏரி எனப்படும் பாங்காங் ட்சோ கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் உள்ளது. சுமார் 134 கி.மீ., நீளமும் 5 கி.மீ., அகலமும் கொண்டு இந்த ஏரி பரந்து விரிந்து காணப்படுகிறது. மலைகளுக்கு இடையே கண்களைக் கொள்ளைக் கொள்ளும் அழகான ஏரி, அதன் பின்னால் பனியால் மூடப்பட்ட மலைகள் என எந்த திசையில் இருந்து பார்த்தாலும் நமது கண்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் மாற்றம் இல்லை.
2006 ல் 'த ஃபால்' மற்றும் 2010 ல் '3 இடியட்ஸ்'ஆகிய திரைப்படங்களில், இந்த ஏரியின் அழகுக் காட்சிகள், படமாக்கிக் காட்டப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகே இந்த ஏரிப் பகுதி சர்வதேச சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக தொடங்கியது.
இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் அருகாமையிலுள்ள, பசுமைப் பள்ளத்தாக்கு மற்றும் திக்சே கிராமத்தை கண்டு இன்புறலாம். பறவை ஆர்வலர்கள் இந்த ஏரியை சுற்றிப்பார்த்து, இந்த பகுதியில் வாழும் பறவைகளான பார் தலையுடைய வாத்துக்கள், சைபீரியக் கொக்கு, நீர்க்கோழி, ஆகியவற்றைக் கண்டு ரசிக்கலாம்.
![]()
|
குறிப்பாக பாங்காங் ஏரி உப்பு நீர் ஏரியாக இருந்தாலும், குளிர்காலங்களில் இதிலுள்ள நீர் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்துவிடும். லேயிலிருந்து 5 மணி நேர பயண தூரத்தில் இவ்விடம் அமைந்துள்ளது. இந்திய சீன எல்லைக்கோடுக்கு அருகில் அமைந்துள்ளதால், உள்நாட்டு நுழைவு அனுமதி (Inner Line Permit) பெற்ற பிறகுதான் இந்த ஏரியை அணுக முடியும்.