இம்மாதத்தில் மூன்று மாநிலங்கள் உட்பட, இந்த ஆண்டில் ஒன்பது மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அதனால், விவசாயிகள், மாத சம்பளம் பெறுவோர், மத்திய தர வகுப்பினர் மற்றும் ஏழைகள் என, அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்த வேண்டிய நிலையில் உள்ள மத்திய அரசு, கடந்த 1ம் தேதி, வரும் நிதியாண்டிற்கான பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்தது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போதைய மோடி ஆட்சியில் தாக்கல் செய்துள்ள முழுமையான கடைசி 'பட்ஜெட்' இது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
மேலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக, மூன்று ஆண்டுகளாக, நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில், நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சியையும் முடுக்கி விடும் வகையில், வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; அதற்கு தக்கபடி மூலதனங்களை அதிகரிக்க வேண்டும் என்பது, சமீப காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றபடி, மூலதன செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடு, ௩௩ சதவீதம் உயர்த்தப்பட்டு, ௧௦ லட்சம் கோடி ரூபாயாகியுள்ளது. ௨௦௧௯ - ௨௦௨௦ம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டதை விட, இது, மூன்று மடங்கு அதிகம்.
அத்துடன், ரயில்வே துறைக்கான ஒதுக்கீடும், ௨.௪ லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, ௨௦௧௩ - ௧௪ம் ஆண்டின் ஒதுக்கீட்டு தொகையை விட, 9 மடங்கு அதிகம். பயணியர் ரயில் போக்குவரத்து அதிகரித்து வருவதால், முக்கிய ரயில்களின் பெட்டிகளை, நவீன வசதிகளுடன் புதுப்பிக்கவும், மேலும், பல ஊர்களுக்கு 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட உள்ளதாலும், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் பெட்டிகளை தயாரிக்கவும் கணிசமான நிதி தேவைப்படுவதால், ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, ௨௦௧௪ல் பதவியேற்றது முதல், வருமான வரி விஷயத்திலும், மாத சம்பளதாரர்களுக்கும் எந்த சலுகையும் காட்டவில்லை என்ற அதிருப்தி நிலவி வந்தது. அந்த பிரிவினரை திருப்திபடுத்தும் வகையில், வருமான வரி விலக்கு வரம்பில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் வாயிலாக, வருமான வரி செலுத்துவோருக்கு கணிசமான தொகை மிச்சமாவதுடன், அவர்களின் செலவிடும் திறனும் அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என, நம்பலாம்.
இருப்பினும், ௨௦௨௦ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி முறை அமலில் இருக்கும். அதே நேரத்தில், பழைய வரி விதிப்பு முறையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய வரி விதிப்பு முறையில் 'இன்சூரன்ஸ்,' சேமநல நிதி, பரஸ்பர நிதியங்களில் செய்யப்படும் முதலீடு, வீடு, கல்விக் கடன் பெற்றிருந்தால் அவற்றின் வட்டிக்கான வரி தள்ளுபடி போன்ற சலுகைகள் கிடைக்கும்.
இதற்கு மாறாக, புதிய வரி விதிப்பு முறையை பின்பற்றுவோர், இதுபோன்ற எந்தச் சலுகைகளையும் பெறாமல், குறைவான வீதத்தில் வரி செலுத்த நேரிடும். அத்துடன், ஏழு லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டிய தேவையில்லை.
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப் பட்டாலும், பல பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. மக்களை கடுமையாக பாதிக்கும் வகையில், எந்த புதிய வரிகளும் விதிக்கப்படவில்லை.
இது தவிர, விவசாயிகளுக்கு வரும் நிதியாண்டில், ௨௦ லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்திருப்பது; மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு உச்ச வரம்பு, ௩௦ லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது; பெண்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள, 'மகிளா சம்மான்' சேமிப்பு திட்டம்; பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, ௭௯ ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டது; மாநிலங்களுக்கு மத்திய அரசு வட்டியில்லாமல் கடன் வழங்குவதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது போன்றவை பாராட்டத்தக்கதாகும்.
மொத்தத்தில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட், வளர்ச்சி திட்டங்களை கருதி தயாரிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களை திருப்திபடுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.