
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் முதல் முறையாக பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களைக் கொண்ட பிரம்மாண்டமான புகைப்படக்கண்காட்சி நடைபெற உள்ளது.

ஒருவார காலம் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியினை வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் மு.க..ஸ்டாலின் திறந்து வைத்து புகைப்பட தொகுப்பு கொண்ட புத்தகத்தையும் வெளியிடவுள்ளார்.அவருடன் அமைச்சர் சேகர்பாபு,கனிமொழி எம்.பி.,உள்ளீட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சென்னையில் துவக்கிவைக்கப்பட்ட தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சுமார் 160 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது.

இவர்கள் புயல் மழை வெயில் பாராது, ஊன் உறக்கம் துறந்து உயிரைப் பணயம் வைத்து எடுத்த புகைப்படங்களில் சிறந்த படங்கள் தொகுக்கப்பட்டு கண்காட்சியில் இடம் பெறுகிறது.புகைப்படக்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதம் பயணித்த படங்களும் இலங்கை பிரச்னை உள்ளீட்ட படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒவ்வொரு படங்கள் சிறப்பாக வந்திருக்கும் பார்த்தவர்களை மெய்சிலிர்க்க செய்திருக்கும் அத்தகைய படங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெரிய அளவில் பார்க்க முடியும் என்பது பார்வையாளர்களுக்கு அரிய வாய்ப்புதான்.

இது போன்ற பத்திரிகையாளர்களின் புகைப்பட கண்காட்சி தமிழகத்தில் நடப்பது அநேகமாக இதுவே முதல் முறை என்பதால் அனைத்து புகைப்பட ஆர்வலர்களும்,பொதுமக்களும்,பள்ளி கல்லுாரி மாணவர்களும் இந்த கண்காட்சியை காண திரண்டுவருவர் என்பதால் ஒரு வாரகாலம் கண்காட்சி நடைபெறுகிறது.அனுமதி இலவசம்.
-எல்.முருகராஜ்