வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கல்வி முதல் விளையாட்டு வரை இந்தியா சாதனை படைத்து வருகிறது. இதனை ஒரு சிலரால் பொறுத்து கொளளமுடியவில்லை. நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு பொறாமை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஜனாதிபதி உரைக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஜனாதிபதி பதவியேற்ற பிறகு, பழங்குடியினரின் நம்பிக்கை, பெருமை அதிகரித்துள்ளது. பழங்குடியினரின் பெருமையாக ஜனாதிபதி திகழ்கிறார்.
தொலைநோக்கான உரையின் மூலம் மக்களுக்கு ஜனாதிபதி வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளார்.தீர்மானம் முதல் வெற்றி வரை ஜனாதிபதி உரையில் அனைத்தும் இடம்பெற்றிருந்தன.எந்த எம்.பி.,யும் ஜனாதிபதி உரையில் குறை கண்டுபிடிக்கமுடியவில்லை.
ஒவ்வொரு உறுப்பினரும் விவாதத்தில் கலந்து கொண்டு, தங்களது வாதங்களை முன்வைத்தனர். எதிர்க்கட்சி எம்.பி.க,க்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது. பார்லிமென்டில் ஒவ்வொருவரும் தங்களது குணநலனுக்கு ஏற்பட உரையாற்றினர். சிலரின் பேச்சு அவர்களை மக்களிடையே அம்பலப்படுத்தியது.
சிலர் பேசியதை கூர்ந்து கேட்ட போது அவர்களுக்கு திறனும் புரிதலும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.ஒருவர் கூட ஜனாதிபதி உரை பற்றி குறிப்பிடவில்லை. இதற்கு பின்னால் உள்ள காரணத்தை மக்கள் புரிந்து கொண்டனர். ஆனால், ஜனாதிபதி உரையை அனைவரும் ஏற்று கொண்டனர்.
ஜனாதிபதி உரையை சிலர் புறக்கணித்தனர். பெரிய தலைவர் ஒருவர் ஜனாதிபதியை அவமதித்தார். இது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது.

முன்னர் இந்தியா உலகத்தை நம்பியிருந்தது. ஆனால், தற்போது, இந்தியாவை உலகம் நம்பி இருக்கும் காலம் வந்துள்ளது.அரசு நிர்வாகத்தில் ஊழலில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.
இந்தியாவின் அதிகவேகமாக வளர்ச்சி பலராலும் பேசப்படுகிறது.
நேற்று முழக்கமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய எம்.பி.,க்களில் பலர் அவைக்கு வரவில்லை.
கோவிட், போர் அச்சத்திற்கு இடையே நாட்டை சிறப்பாக நிர்வகித்து வருகிறோம்.சவால் இல்லாமல் எந்த வாழ்க்கையும் இல்லை.
இந்தியாவின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.அண்டை நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா முன்னேறி வருகிறது.இந்த அரசின் சாதனை, இந்திய மக்களை பெருமையில் ஆழ்த்தி உள்ளது. எதிர்காலத்தை கணித்து கூறும் வல்லுநர்களுக்கு இந்தியா மீது பெரும் நம்பிக்கை உள்ளது. ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை.
சிறந்த முடிவுகளை எடுக்கக்கூடிய தேச நலனில் அக்கறை உள்ள நிலையான அரசு தற்போது உள்ளது.
உலகளவில் அதிகளவு கோவிட் தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
கோவிட் காலகட்டத்தில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. நெருக்கடியான காலத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியாவை உலகம் அங்கீகரித்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
நகைச்சுவை தாக்குதல், எதிர் தாக்குதல், விவாதங்கள் போன்றவை பார்லிமென்டில் பொதுவானது.இந்தியா மிகப்பெரிய வாய்ப்புகளை சந்தித்து கொண்டுள்ளது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. எரிசக்தி நுகர்வில் இந்தியா, உலகின் 3வது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. மொபைல்போன் உற்பத்தியில் 2வது இடத்தில் இருக்கிறோம். ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் அளப்பறிய சாதனை படைத்து வருகிறோம். கல்வி முதல் ஒவ்வொரு துறையிலும் இந்தியா வரலாற்றை படைத்து வருகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு விலைவாசி உயர்வு இரட்டை இலக்கத்தில் இருந்தது. தற்போது கட்டுக்குள் உள்ளது. 2004 14 வரை இந்தியாவில் ஊழல் அதிகளவில் இருந்தது. தற்போது நிலைமை உள்ளதால் சிலரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. நாட்டின் திறமை வெளிப்படுகிறது.
முந்தைய 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் வன்முறை நிலவியது. இந்தியாவின் குரல் பலவீனமாக ஒலித்தது. தற்போது 140 கோடி மக்களின் திறமை வெளிப்படுகிறது. மக்களின் திறமைகளை முந்தைய ஆட்சியாளர்கள் மறைத்தனர். 2010 காமன்வெல்த் போட்டியில் ஊழல் இருந்ததால், வீரர்களின் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.