வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளுக்கு நேரடி கொள்முதல் நிலையங்களில் போதிய பாதுகாப்பு இல்லாமல் நெல் குவியல்கள் கொட்டிக் கிடக்கின்றன. மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து வீணாகின்றன. இதனால் தகுந்த விலை கிடைப்பதில்லை.

மேலும் ஊழியர்கள் விவசாயிகளிடம் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். அதற்கு தகுந்த நிவாரணம் கிடைக்கவில்லை.
நெல் அதிக ஈரப்பதம் என நேரடி கொள்முதல் நிலையங்களில் கூறுகின்றனர். திறந்த வேலியில் நெல்லை கொள்முதல் செய்யாமல் வைக்கின்றனர். ஈரப்பதம் அதிகரித்த நெல்மணிகளை உலர்த்தினால் விலை கிடைக்கும் என்பதால், சாலையில் நெல்லை கொட்டி உலர்ந்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நெல்லின் தரம் குறைகிறது.
இதன் பின் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டு வந்தாலும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். அதேபோல் இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து தருவதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு அரசு தகுந்த நடவடி்ககை எடுக்க வேண்டும்.

திறந்த வெளியில் வீணாகும் நெல்:
தமிழகத்தில் சில இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் இல்லை. சமீபத்தில் மழையால் பல ஆயிரம் டன் நெல்மணிகள் நனைந்து வீணாகின. மழை ஓய்ந்தது.. வெயில் எட்டி பார்த்தது விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
ஆனால் இதுவரை அவற்றை கொள்முதல் செய்யவில்லை. கடன் வாங்கி விவசாயியம் செய்து நெல்லை கொண்டு வந்த விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் காத்து கிடக்கின்றனர். இதனால் விவசாயிகள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர்.
இது குறித்த விவசாயி ஒருவர் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்து நெல்லை விளைவித்தோம். அவற்றை அறுவடை செய்து கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவந்து, ஒருவாரமாக இரவு, பகலாக காத்துக் கிடக்கிறோம். கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் அலட்சியம் காட்டுகின்றனர்.
பல ஏக்கரில் நெல் அறுவடை செய்யாமலும் உள்ளது. அறுவடை தாமதமானால் நெல்லை அரைக்கும்போது அரிசியாக வராமல் குருணையாக நொறுங்கிவிடும். எனவே, எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் எங்களுக்கு நடக்கும் அலட்சியத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனக் கூறினார்.
மற்றொரு விவசாயி கூறுகையில், விவசாயிகள் கஷ்டப்பட்டு 3 - 4 மாதங்கள் பாடுபட்டு அறுவடை செய்த நெல்லிற்கு தகுந்த வருமானம் கிடைப்பதில்லை. நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தால் நல்ல வருவாய் கிடைக்கும் என கொண்டு வருகின்றோம்.
அங்கு பார்த்தால் நெல் அதிக ஈரப்பதம் கொண்டுள்ளது என கூறுகின்றனர். வேர்வை சிந்தி உழைத்த உழைப்பிற்கு தகுந்த வருவாய் இல்லை. கடன் வாங்கி விவசாயம் செய்தோம். கடனை திருப்பி கொடுக்க முடியாமல், குடும்பத்தோடு ரத்தக் கண்ணீர் வடிக்கிறோம்.எனக் கூறினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மணிகள் வீணாகி வருகின்றன. விவசாயிகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என திமுகவினர் குற்றம் சாட்டி வந்தனர். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவோம் என திமுகவினர் அறிக்கை வெளியிட்டனர்.
ஆனால் ஆட்சிக்கு வந்து இத்தனை மாதங்கள் ஆகியும், விவசாயிகளுக்கு திமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. திறந்த வெளியில் வீணாகும் நெல்.. விவசாயிகளின் ரத்த கண்ணீருக்கு அரசு எப்பொழுது முற்றுப்புள்ளி வைக்கும் என்ற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.