புதுடில்லி:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க, ஒன்பது மாநிலங்களை சேர்ந்த 31 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுஉள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்துவர்களுக்கு, குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இல்லாமல், குடியுரிமை சட்டம் 1955ன் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், குடியுரிமை உடனடியாக கிடைக்கவும், ஒன்பது மாநிலங்களை சேர்ந்த 31 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் புதுடில்லியை சேர்ந்த 31 கலெக்டர்கள் குடியுரிமை வழங்குவது தொடர்பான முடிவுகள் எடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.