சிதம்பரம்:''கோவில் நிர்வாகத்தில் என்ன தவறு நடந்தது என்பதை, ஆதாரத்துடன் தெரிவித்தால், பதில் அளிக்க தயாராக இருக்கிறோம்,'' என, சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து, சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறியதாவது:
ஹிந்து சமய அறநிலையத்துறை உள் நோக்கத்துடன், சிதரம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை பற்றி அவதுாறு செய்திகளை பரப்பி வருகிறது.
நடராஜர் கோவில் கணக்கு கேட்டு கடிதம் அனுப்பினர். பின் ஆய்வுக்குழு வந்தது.
அப்போது நாங்கள்,'சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையிலும், தனி சமய பிரிவினரான பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வரும் இக்கோவிலில், அறநிலையத் துறை சட்டத்தின் கீழ் கணக்கு கேட்கவோ, ஆய்வு நடத்தவோ முடியாது' என கூறினோம்.
அதன் பிறகும் மீண்டும் மீண்டும் கோவில் நிர்வாகத்துக்கு அறிவிப்பு கடிதத்தை அனுப்பி வந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதன் பிறகும் 2005 முதல் 2022 வரை நகை சரிபார்ப்பு செய்ய வேண்டும் என கோரினர்; ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது.
பின், கணக்கு ஆய்வு செய்ய கேட்ட போது நாங்கள் பட்டயம் பெற்ற தணிக்கையாளர்கள் மூலம் கணக்கு, நகைகளை சரிபார்த்து தணிக்கை செய்ய உள்ளோம் என பதில் தெரிவித்திருந்தோம்.
அதன்படி கடந்த செப்., 20ம் தேதியிலிருந்து கோவில் சட்ட ஆலோசகரான என் மேற்பார்வையில் பட்டயம் பெற்ற இரு தணிக்கையாளர்கள் மூலம் கோவில் கணக்குகளை ஆய்வு செய்து தயாராக வைத்துள்ளோம்.
தற்போது பிப்., 2ம் தேதி முதல், பட்டயம் பெற்ற தணிக்கையாளர், எடையாளர்கள், நகை மதீப்பீட்டாளர்கள் மூலம் மறுபடியும் நகைகளை சரிபார்த்து தணிக்கை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நடராஜர் கோவில் தனி நிர்வாகம் என்பதால் வெளிப்படை தன்மையை நிரூபிக்கும் வகையில் வெளி தணிக்கையாளர்களை வைத்து தணிக்கையை தொடங்கி உள்ளோம்.
கோவில் நிர்வாகத்தில் தவறு உள்ளது; நாங்கள் ஆய்வு செய்வோம் என அறநிலையத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
அப்படி, கோவில் நிர்வாகத்தில் என்ன தவறு நடந்தது என்பதை ஆதாரத்துடன் தெரிவித்தால், பதில் அளிக்க தயாராக இருக்கிறோம்.
ஆனால், தவறு நடந்ததாக பொய் பிரசாரம் செய்தால், எங்களால் மறுக்கத்தான் முடியும். குற்றம் இருந்தால் அந்த ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும். ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொல்வதால் உண்மையாகி விடாது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து ஓராண்டாகவே, கோவிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட தீட்சிதருடன் இணைந்து ஆன்மிகத்திற்கு அப்பாற்பட்ட நான்கு பேர் சேர்ந்து, ஹிந்து அறநிலையத் துறையினர் துாண்டுதலின் படி, இதுபோன்ற அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில் பொதுதீட்சிதர்களின் செயலர் ஹேமசபேச தீட்சிதர் உடனிருந்தார்.