பழநி:தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியநாயகி அம்மன் கோவிலில் தெப்பத் தேரோட்டம் நடந்தது.
பழநி மலை முருகன் கோவில் நிர்வாகத்திற்குட்பட்ட பெரியநாயகி அம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஜன., 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதியுலா நடத்தப்பட்டது. பிப்., 3ல் திருக்கல்யாணம், பிப்., 4 ல் தேரோட்டம் நடந்தது.
பத்தாம் நாளன்று வள்ளி, முத்துக்குமாரசுவாமி திருமணத்தால் தெய்வானை கோபிக்க வீரபாகு துாதராக சென்று சமாதானம் செய்து கோயில் கதவை திறக்கும் திருஊடல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் தெப்பக்குளம் மண்டபத்தில் சுவாமி எழுந்தருள அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் சுவாமி எழுந்தருள தெப்பத் தேரோட்டம் நடத்தப் பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு கொடி இறக்குதல் முடிந்து விழா நிறைவு பெற்றது.