வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வேலுார்:கத்தியால் குத்திய ரவுடியை பிடிக்கத் தவறியதால் லத்தேரி போலீஸ் ஸ்டேஷனில் 11 போலீசார் மாற்றி எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரியை சேர்ந்தவர் பாபு, 50. இவர் அ.தி.மு.க., வில் மாவட்ட மாணவர் அணி துணை செயலாளராக இருக்கிறார். இவர் லத்தேரி பஸ் ஸ்டாண்ட் அருகில் ஜவுளிக்கடை வைத்திருக்கிறார். இவர் கடந்த 5ம் தேதி இரவு 10:00 மணிக்கு கடையை மூடிக்கொண்டிருந்த போது, லத்தேரி அம்பேத்கார் காலனியை சேர்ந்த ரவுடி சதீஷ்குமார், 30, என்பவர் குடிபோதையில் பாபுவிடம் தகராறு செய்துள்ளார்.
![]()
|
இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அதை பார்த்துக் கொண்டிருந்த லத்தேரி தி.மு.க., இளைஞரணி ஒன்றிய பொருளாளர் சுதாகர், 40, என்பவர் தடுத்துள்ளார்.
ஆத்திரமடைந்த சதீஷ்குமார் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த பாபு, சுதாகர் ஆகியோர் வேலுார் அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து பாபு, சுதாகர் ஆகியோர் தனித்தனியாக லத்தேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் தப்பியோடிய சதீஷ்குமாரை பிடிக்க முயற்ச்சிகள் மேற்கொள்ளவில்லை.இந்நிலையில், சதீஷ்குமாரை மர்ம நபர்கள் கொலை செய்து பாலாற்றில் வீசி விட்டதாக தகவல் பரவியது. போலீசார் பாலாற்றில் தேடுதல் வேட்டை நடத்தியதில் வதந்தி என தெரியவந்தது. கத்தியால் குத்திய ரவுடியை கைது செய்யக் கோரி நேற்று லத்தேரி கடையடைப்பு, ஆர்பாட்டம் நடந்தது. அப்படியும் போலீசார் கத்தியால் குத்தியவரை கைது செய்யவில்லை.
![]()
|
இதையடுத்து கத்தியால் குத்திய ரவுடி சதீஷ்குமாரை பிடிக்க தவறியதற்காகவும், இந்த வழக்கில் சரிவர நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், லத்தேரி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய எஸ்.ஐ., க்கள் ரங்கநாதன், பாஸ்கரன், போலீசார் வினோத் ஆகியோர் வேலுார் ஆயுதப்படைக்கும், போலீசார்கள் சந்திரசேகரன், தட்சிணாமூர்த்தி, தீர்த்தகிரி, சந்தோஷ், லோகேஸ்வரன், சந்திரசேகரன், ராஜசேகரன், புகழேந்தி ஆகியோர் காட்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கும் பணியிட மாற்றம் செய்து வேலுார் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் இன்று உத்தரவிட்டார்.
ஒரே நேரத்தில் 11 போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.