Government employees will not change! | அரசு ஊழியர்கள் திருந்த மாட்டார்கள்! | Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அரசு ஊழியர்கள் திருந்த மாட்டார்கள்!

Added : பிப் 08, 2023 | கருத்துகள் (2) | |
என்.நக்கீரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அரசு நலத்திட்ட உதவிகள் பெறவும், பட்டா மாற்றம் செய்யவும், அரசு சான்றிதழ்கள் பெறுதல் போன்றவற்றுக்கும், மக்களை அனாவசியமாக அரசு அலுவலகங்களுக்கு அலைய விடக்கூடாது. ஒவ்வொரு திட்டமும், எந்த நோக்கத்திற்காக துவக்கப்பட்டதோ, அதை சிதைக்காமல் முழுமையாக நிறைவேற்றும் வகையில், அதிகாரிகளின் செயல்பாடு இருக்க வேண்டும்'

என்.நக்கீரன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அரசு நலத்திட்ட உதவிகள் பெறவும், பட்டா மாற்றம் செய்யவும், அரசு சான்றிதழ்கள் பெறுதல் போன்றவற்றுக்கும், மக்களை அனாவசியமாக அரசு அலுவலகங்களுக்கு அலைய விடக்கூடாது. ஒவ்வொரு திட்டமும், எந்த நோக்கத்திற்காக துவக்கப்பட்டதோ, அதை சிதைக்காமல் முழுமையாக நிறைவேற்றும் வகையில், அதிகாரிகளின் செயல்பாடு இருக்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறவும், பட்டா மாற்றம் செய்யவும், மக்கள் எப்படி அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பது, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். லஞ்சம் கொடுக்காமல், வி.ஏ.ஓ., மற்றும் தாலுகா அலுவலகங்களில், எந்த சான்றிதழும் பெற முடியாது என்ற அவலநிலை தான் இன்று வரை நீடிக்கிறது.

பட்டா பெயர் மாற்றம் செய்ய, வி.ஏ.ஓ.,க்கள், மக்களிடம் துணிந்து, ௫,௦௦௦ முதல், ௬,௦௦௦ ரூபாய் வரை அப்பட்டமாக லஞ்சம் வாங்குகின்றனர்; அப்படியே லஞ்சம் கொடுத்தாலும், உடனே பெயர் மாற்றித் தரமாட்டார்கள்; 'அது சரி இல்லை... இது சரி இல்லை...' என்று காரணங்களை அடுக்கியபடியே இருப்பர். நீண்ட இழுத்தடிப்பிற்கு பிறகே பட்டா பெற முடியும்.

கரைவேட்டிக்காரர்கள் தலையிட்டால் மட்டுமே, அரசு தரும் எந்த நலத்திட்ட உதவியையும் பெற முடியும் என்பது தான், நிதர்சனமான உண்மை. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு தான், லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் நடக்காது என்ற, துர்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.

முதல்வர் சொல்லும் அறிவுரைகளை, அமைச்சர்களே மதித்து நடக்காத போது, கலெக்டர்கள், தாசில்தார்கள், வி.ஏ.ஓ.,க்கள் மட்டும் மதித்து நடப்பரா... லஞ்சம் வாங்குவதை தங்களின் பிறப்புரிமையாக கருதும் அரசு ஊழியர்கள், முதல்வர் சொல்வது போல, மக்களை வாட்டி வதைக்காமல் சேவை செய்ய முன்வருவரா?

காமராஜரின் பொற்கால ஆட்சியில் தான், அரசு அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொண்டனர். கருணாநிதியின் ஆட்சியில், லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் பஞ்சமாபாதகம் இல்லை என்ற நிலை உருவானது. முதல்வருக்கு வேண்டுமானால், இது மறந்து போயிருக்கலாம்; பொதுமக்களில் பலருக்கும், இது, பசுமையாக நினைவில் உள்ளது.

'காசில்லாதவன் கடவுளே ஆனாலும், கதவை சாத்தடி' என்ற விலைமாதரின் கொள்கையை பின்பற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திருந்தி வாழ வேண்டும் என்று எதிர்பார்த்தால், நாம் தான் மாங்கா மடையர்களாக இருப்போம்.

ll
கருணாநிதி பெயரில் எல்லாம் மாறும்!ஆர்.ராமானுஜதாசன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: அண்ணாதுரை மறைந்த நேரம். அப்போது, அதுதான் முதல் பெரிய தலைவரின் மறைவு; யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அண்ணாதுரைக்கு நினைவுச் சின்னம் வைக்கும்படி பலரும் யோசனை கூறினர்.

'ரஷ்யாவில், 'லெனின் கிரேட்' என்று உள்ளதை போல, சென்னை மாநகரத்துக்கு, 'அண்ணா கிரேட்' என்று பெயர் வைக்கலாம்' என்றார், ஒருவர்; மற்றொருவரோ, 'அண்ணாதுரைக்கு, தமிழகம் முழுதும் 1,000 சிலைகள் வைக்க வேண்டும்' என்றார்.

ஆனால், தான் உயிருடன் இருக்கும் போதே, தனக்கு சென்னையில் சிலை வைத்துக் கொண்டவர் அண்ணாதுரை. இப்போது உள்ள அண்ணாநகர், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த, பெரிய உலக வர்த்தக கண்காட்சியின் போது கட்டமைக்கப்பட்டது. வெறும் குப்பைமேடு பெரிய இடமாக மாறியது.

ஆனாலும், காங்கிரஸ் கட்சியினருக்கு, தங்கள் தலைவர்கள் பெயரை வைக்கத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக, தி.மு.க., பட்டா போட்டுக் கொண்டது; தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், எல்லா இடங்களிலும் அண்ணாதுரை நாமம் தான்.

அண்ணாசாலை, அண்ணா சிலை, அண்ணா தியேட்டர், அண்ணா மேம்பாலம், அண்ணா பல்கலை கழகம் என, எல்லாம் அண்ணாதுரை பெயர் தான். பொதுவாகவே திராவிட ஆட்சியில் பெயர் வைத்துக் கொள்வது சடங்கு மாதிரியாகி விட்டது. இப்போது ஒருவர், 'மெரினாவை 'கருணாநிதி கடற்கரை' என, பெயர் மாற்ற வேண்டும்' என்கிறார். இது, எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை. கருணாநிதிக்கும், கடற்கரைக்கும் என்ன சம்பந்தம்?

இப்படியே போனால், தமிழ்ப்படம் என்ற ஒரு படத்தில், கதாநாயகன் எல்லா இடங்களிலும் தன் பெயரை சூட்டிக் கொள்வான். அதுபோல, 'கருணாநிதி பஸ் ஸ்டாண்டு, கருணாநிதி ஆஸ்பத்திரி, கருணாநிதி சாலை, கருணாநிதி மின்சார வாரியம், கருணாநிதி மெட்ரோ ரயில், கருணாநிதி பி.டபிள்யு.டி.,' என, பெயர் வைக்க வேண்டியது தான். இவர்களை யார் கேள்வி கேட்க முடியும்?

lll


திருமாவை நம்புவோர் பாவம்!ஏ.இக்னேசியஸ் சாந்தகுமார், விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: 'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது ஓட்டு வங்கிக்கு உதவாது; இருந்தாலும், வரவேற்கிறோம்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

'நான் செய்தது தப்பு இல்லை... ஆனாலும், சரின்னு சொல்லவில்லை' என, நடிகர் கமல்ஹாசன் பாணியில், இயக்குனர் பாலச்சந்தர் திரைப்பட கதை வசனம் போல, பொதுமக்களை முட்டாளாக்கும், 'டயலாக்'கை அவிழ்த்து விட்டுள்ளார் திருமாவளவன்.

இவரின் ஏட்டிக்குப் போட்டியான செயல்பாடு கள் பற்றிய சில விபரங்கள்...

காவல் துறையை கண்டித்து, தொண்டர்களை ஏவி, ஆர்ப்பாட்டம் செய்வார் திருமா; ஆனால், அதே காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு துதி பாடுவார். இது, எந்த வகை அரசியல் என்பது அவருக்கே வெளிச்சம்

 பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, 'பெரியார் விருது' கொடுத்தவர் இவர். பின், அவரையே ஜாதி தலைவராக மேடையில் சாடினார்... தற்போதும் விமர்சித்து வருகிறார்

 இலங்கை நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக் ஷேவை, தமிழகத்தில் திட்டித் தீர்ப்பார். ஆனால், இலங்கைக்கு விருந்தினராகச் சென்று, அவருடன் கைகுலுக்கி, கட்டித் தழுவி பாசத்தை பொழிவார்; அவருடன் விருந்தும் உண்டு மகிழ்வார்!

 சமத்துவ அரசியல் செய்வதாக மேடைக்கு மேடை முழங்குவார்; ஆனால், ஒடுக்கப்பட்ட ஜாதியினர் போர்வையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரை மட்டுமே விமர்சிப்பார்

 மக்கள் நலக் கூட்டணி எனக்கூறி, தி.மு.க., எதிர்ப்புக் கொள்கை என்ற கயிற்றின் வாயிலாக, விஜயகாந்த் என்ற தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டு, தற்போது, தி.மு.க.,விடமே தஞ்சமடைந்து, பதவி பெற்றுள்ளார்.

இவரின் செயல்பாடுகள், என்ன வகை அரசியலோ தெரியவில்லை. மொத்தத்தில், தமிழக அரசியலில், வி.சி., கட்சித் தலைவர் திருமா, புரியாத புதிராகவே வலம் வருகிறார். இப்படிபட்டவரை நம்பி, ஒரு கூட்டம் உள்ளதை நினைத்தால் வேதனையாக உள்ளது.

lll

l


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X