''அரசு உத்தரவை, அதிகாரிகளே மீறினா எப்படி ஓய்...'' என்றபடியே, 'பில்டர்' காபியுடன் வந்தமர்ந்தார், குப்பண்ணா.
''என்ன உத்தரவு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''சொல்றேன்... 'வேலையில இருந்து, 'ரிட்டையர்' ஆற அரசு அலுவலர்களை, மறு பணியமர்வு அல்லது ஒப்பந்த அடிப்படையில, தலைமை செயலகத்துல நியமிக்க வேண்டாம்'னு, அரசு தரப்புல கொள்கை முடிவு எடுத்தா ஓய்...
''ஆனாலும், ரிட்டையர் ஆனவாளை தங்களோட உதவியாளர்களாவும், ஆலோசகர்களாவும் பல அமைச்சர்கள் நியமிச்சிருக்கா... அதேபோல, அண்ணா மேலாண்மை நிலையம், ஆதிதிராவிடர் நலத்துறை உட்பட, பல அரசு நிறுவனங்கள்லயும் ரிட்டையர் ஆனவா நியமிக்கப்பட்டு இருக்கா ஓய்...
''இதனால, 'இவாளுக்கு பதிலா புது ஆட்களை நியமிச்சா, இளைஞர்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமே'னு, தலைமைச் செயலக ஊழியர்கள் முணுமுணுக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''குளுகுளு ஊருல நடக்கும் சூடான சங்கதியை கேளுங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''நீலகிரி மாவட்டம், கூடலுார், முதுமலை, குன்னுார், அவலாஞ்சி ஏரியாக்கள்ல, வனத்துறையின், 'கெஸ்ட் ஹவுஸ்' பராமரிப்பு, கழிப்பறை வசதி, வேலி போடுறது போன்ற பணிகளுக்கு, 'டெண்டர்' விடுதாவ...
''ரேஞ்சர் உள்ளிட்ட சில அதிகாரிகள், 'பினாமி' பெயர்ல, இந்த டெண்டர்களை எடுத்து காசு பார்க்காவ... இது போதாதுன்னு, வனத்துறையில இருக்குற வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட, சில தற்காலிக பணிகளுக்கும் வெளியாட்களை நியமிச்சு, அதுலயும் துட்டு பார்க்காவ வே...
''இந்த ரேஞ்சர்களை பத்திய விபரங்கள், 'ஆடியோ' ஆதாரத்துடன், வனத்துறை முதன்மை செயலர் வரை புகாரா போயிட்டு... ஏன்னா, டெண்டர் கிடைக்காத சில ஒப்பந்ததாரர்களே, 'போட்டு' குடுத்துட்டாவ வே...'' என சிரித்த அண்ணாச்சி, ''அடடே சசிகுமாரு, சரவணா எப்ப வந்தீய... இங்கன உட்காருங்க...'' என, நண்பர்களுக்கு இடம் அளித்தார்.
''ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் சொத்தை, தி.மு.க., நிர்வாகி தட்டிட்டு போக பார்க்கிறாருங்க...'' என, கடைசி தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த இடத்துலன்னு விபரமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை, மேற்கு மாம்பலம் மேட்லி சாலை பக்கத்துல, 350 வருஷம் பழமையான, காசி விஸ்வநாதர் கோவில் இருக்குதே... இதுக்கு சொந்தமா கோடிக்கணக்குல சொத்துக்கள் இருக்குதுங்க...
''இதுல, மேட்லி ரயில்வே சுரங்க பாதை பக்கத்துல இருக்குற, 5,400 சதுர அடி கட்டடத்தையும், சின்ன நிலத்தையும், அதே பகுதியைச் சேர்ந்த இருவர், 1962லயே, 99 வருஷ குத்தகைக்கு எடுத்தாங்க...
''குத்தகை எடுத்தவங்க ஒழுங்கா வாடகையை கட்டாம, 66 லட்சம் ரூபாய் பாக்கி வச்சதால, ஹிந்து சமய அறநிலையத் துறை, அவங்களை காலி செஞ்சு, கட்டடத்துக்கு, 'சீல்' வச்சிடுச்சுங்க...
''அங்க இருந்த மூணு கடைகளும், மூணு வீடுகளும் பல நாட்களா பூட்டி கிடந்துச்சு... இது, தி.மு.க., வட்ட நிர்வாகி கண்ணை உறுத்த, மனுஷன் பூட்டை உடைச்சு உள்ள பூந்துட்டாரு... இப்ப, அந்த கட்டடங்களுக்கு சொந்தம் கொண்டாடுறாருங்க...
''இது சம்பந்தமா ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் புகார் குடுத்தும், நடவடிக்கை இல்லைங்க...'' என்ற அந்தோணிசாமி, ''ஹலோ மிஸ்டர் செந்தில்குமார்...'' என, நண்பரை பார்த்து பேசியபடியே நடக்க, சபை கலைந்தது.