பிப்ரவரி 9, 1996
ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில், வீணைக் கலைஞர், செல்லப்பள்ளி ரங்காராவின் மகனாக, 1936 அக்., 13ல் பிறந்தவர், ஹனுமானுலு எனும் சிட்டி பாபு.
இவர், இமானி சங்கர சாஸ்திரியிடம் வீணை கற்று, 12 வயதில் கச்சேரி செய்தார். லைலா - மஜ்னு திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு வர, குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார். 1947ல் வெளியான, திக்கற்ற பார்வதி படத்துக்கு இசையமைத்தார். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு படங்களில் தனித்த அடையாளத்துடன், வீணை இசை அமைத்தார்.
பாடல்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட ஜெயகாந்தனின், உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு இவர் அமைத்த பின்னணி இசையால், அந்த படம் தேசிய விருது பெற்றது. இவரது இசையில் மயங்கிய மைசூர் மகாராஜா, தன் கழுத்தில் இருந்த தங்க மாலையை கழற்றி, இவருக்கு அணிவித்து கவுரவித்தார்.
உலகம் முழுக்க வீணை இசைக் கச்சேரிகளை நடத்திய இவர், 1996ல், தன், 59வது வயதில், இதே நாளில் மறைந்தார்.
வீணை என்றாலே, சிட்டி பாபு என, நினைவு கூரப்படுபவரின் நினைவு தினம் இன்று!