மும்பை:வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்து உள்ளது.
மிதமான அளவில் வட்டி உயர்த்தப்பட்டு உள்ளபோதிலும், சூழலை பொறுத்து, வட்டி உயர்வு தொடர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தியதை அடுத்து, வங்கிகளும் வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவற்றுக்கான வட்டியை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், இத்தகைய கடன்களை வாங்கியவர்கள், சற்று அதிகமாக தவணைத் தொகை கட்ட வேண்டியதிருக்கும். அதே சமயம், வங்கிகள், டெபாசிட்டுகளுக்கு வட்டியை உயர்த்தி அறிவிக்கும்பட்சத்தில், மக்கள் தங்கள் டெபாசிட்டுகளிலிருந்து அதிக வருவாய் பெறுவர்.
நேற்றைய கூட்டத்தின் முடிவில், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள முக்கியமான அறிவிப்புகள்:
வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம், 25 அடிப்படை புள்ளிகள் அதாவது, 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து வட்டி விகிதம் 6.50 சதவீதமாக உயர்கிறது
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ள நிலையில், 2023 - 24ம் நிதியாண்டில், குறைந்து, 6.4 சதவீதமாக இருக்கும்
நாட்டின் சராசரி பணவீக்கம், நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் நிலையில், அடுத்த நிதியாண்டில் 5.3 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கலாம்
பணவீக்கம் குறித்த கண்ணோட்டமானது, நீடிக்கும் புவிசார் அரசியல் சூழல் மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றால் குறைந்துள்ளது
இந்திய பொருளாதாரம் உறுதியானதாக இருக்கும். அதிகரித்துள்ள விதைப்பு பரப்பு, வலுவான கடன் விரிவாக்கம், வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மூலதன செலவுகள் ஆகியவை காரணமாக, நாட்டின் பொருளாதாரம் வலுவானதாக இருக்கும்
நடப்புக் கணக்கு பற்றாக்குறையை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில், ஏப்ரல்_ செப்டம்பர் வரையிலான காலத்தில் 3.3 சதவீதமாக இருந்தது, அக்டோபர் - மார்ச் காலத்தில் மிதமானதாக இருக்கும்
அன்னிய செலாவணி இருப்பு, ஜனவரி 27ம் தேதி நிலவரப்படி 576.8 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 47.30 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது
கடந்த ஆண்டிலும், நடப்பு ஆண்டிலும் இந்திய ரூபாய் மதிப்பு, ஆசியாவின் பிற கரன்சிகளைவிட குறைவான ஏற்ற இறக்கத்தையே சந்தித்து வருகிறது
இந்தியாவுக்கு வருகை தரும் ஜி - 20 நாடுகளை சேர்ந்த பயணியர்கள், யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தலாம். விரைவில் அனைத்து நாடுகளிலிருந்து வரும் பயணியருக்கும் இது விரிவுபடுத்தப்படும்
சில்லரை நாணயங்களை மக்கள் பெறுவதற்கு வசதியாக, முதற்கட்டமாக, 12 நகரங்களில் 'க்யு.ஆர்., கோடு' அடிப்படையிலான 'காய்ன் வெண்டிங் மெஷின்'கள் நிறுவப்படும்
ரிசர்வ் வங்கியின் அடுத்த பணக்கொள்கை கூட்டம், ஏப்ரல் 3 - 6 தேதிகளில் நடைபெறும்
இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதார கண்ணோட்டம், சில மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல இப்போது மோசமாகத் தெரியவில்லை. முக்கிய நாடுகளில் வளர்ச்சி வாய்ப்புகள் மேம்பட்டு உள்ளன. அதே சமயம், பணவீக்கம் குறைந்து வந்தாலும், பல முக்கியமான நாடுகளில், இலக்கை விட அதிகமாகவே இருக்கிறது. நிலைமைகள் நிச்சயமற்றவையாகவே உள்ளன.
சக்திகாந்த தாஸ், கவர்னர், ரிசர்வ் வங்கி
தொடர்ந்து ஆறாவது முறையாக, ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரித்துள்ள நிலையில், 'இனி வட்டியை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருக்காது; இதுவே கடைசி உயர்வாக இருக்கக்கூடும்' என பல பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பணவீக்கம் அதிகரித்ததை அடுத்து, கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை மொத்தம் 2.50 சதவீதம் அளவுக்கு வட்டி உயர்த்தப்பட்டு உள்ளது.
ரூபாய் நோட்டை, சில்லரை காசுகளாக மாற்ற இனி அலைய தேவையிருக்காது. ரிசர்வ் வங்கி, முதற்கட்டமாக நாட்டில் உள்ள 12 நகரங்களில், ஏ.டி.எம்., வாயிலாக சில்லரை காசுகளை பெறும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.பணம் எடுப்பதற்காக இருக்கும் ஏ.டி.எம்., களை போலவே, நாணயங்களை பெறுவதற்கான இயந்திரங்களும் அமைக்கப்படும். இந்த மிஷினில், க்யு.ஆர்., கோடு வாயிலாக, நாம் தேவையான சில்லரை காசுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகை, நம் வங்கிக் கணக்கிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். விரைவில் அனைத்து இடங்களிலும் இந்த வசதிகள் அமைக்கப்படும் என்றும்; இது குறித்த வழிகாட்டுதல்கள் வங்கிகளுக்கு வழங்கப்படும் என்றும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.