புதுடில்லி: 'ஏத்தர் எனர்ஜி' நிறுவனம், அதன் 100வது விற்பனை மையத்தை, புதுடில்லியின் பட்பர்கஞ்ச் பகுதியில் துவக்கிஉள்ளது. இந்நிறுவனம் துவங்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் 10வது ஆண்டை கொண்டாடும் விதமாக, பல மைல்கல் சாதனைகளை செய்துள்ளது.
அதாவது, 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, அதன் விற்பனை விகிதம் 329 சதவீதம் அதிகரித்து, 12 ஆயிரத்து 149 ஸ்கூட்டர்களை, 2022ல் விற்பனை செய்துள்ளது.
அதுமட்டுமின்றி; அதன் 1 லட்சமாவது ஸ்கூட்டரையும் அண்மையில் தயாரித்து வெளியிட்டு உள்ளது.
நாடு முழுதும், கிட்டத்தட்ட 80 நகரங்களில் இதன் விற்பனை மையங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில், ஏத்தர் ஸ்கூட்டர் விற்பனை முன்னிலையில் இருக்கிறது.
மின்சார இரு சக்கர வாகன சந்தையில், 14.1 சதவீத பங்கை வைத்துள்ள ஏத்தர், முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 மாதங்களில் மட்டும், 50 விற்பனை மையங்களை துவக்கிஉள்ளதை தொடர்ந்து, வரும் மார்ச் மாதத்திற்குள் 200 விற்பனை மையங்களை, இந்தியா முழுதும் துவங்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
தற்போது, 900 'ஏத்தர் பாஸ்ட் சார்ஜிங்' நிலையங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதை மார்ச்க்குள் 1,400 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது, ஏத்தர் நிறுவனம்.