சென்னை:முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவதை ஊக்குவிக்க, அதற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கெடுக்கின்றனர். சிலர் தொழில், குழந்தைகளின் கல்வி போன்ற காரணங்களுக்காக, வெளியூர் செல்கின்றனர்.
2.70 சதவீதம்
கணக்கெடுத்த தேதியில் இருந்து, 20 தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், மின்சாரம் துண்டிக்கப்படும்.
பின், அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும் மீண்டும் மின்சாரம் வழங்கப்படும். வெளியூர் குறிப்பாக, வெளிநாடுகளில் வசிப்போருக்கு, மின் பயன்பாடு கணக்கெடுத்த விபரம் தெரிவதில்லை.
அவர்கள் மட்டுமின்றி அனைத்து நுகர்வோர்களும், மின் வாரியத்திற்கு உத்தேச அடிப்படையில், மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தும் வசதி உள்ளது. இந்த தொகைக்கு மின் வாரியம் சார்பில், ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது.
இதை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதியில் நிர்ணயம் செய்கிறது.
நடப்பு 2022 - 23ம் நிதியாண்டில் முன்கூட்டியே செலுத்தப்படும் மின் கட்டணத்திற்கு, 2.70 சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
இந்த வட்டி குறைவாக இருப்பதால், பலர் முன்கூட்டியே கட்டணம் செலுத்துவதில்லை.
எனவே, அதிக வட்டி வழங்கும் பட்சத்தில், பலரும் முன்கூட்டியே கட்டணம் செலுத்த வாய்ப்புள்ளதாக, மின் வாரியம் கருதுகிறது.
இதனால், இம்மாத இறுதியில் நிர்ணயிக்கப்பட உள்ள வட்டி விகிதத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.