சென்னை:புயலில் மின் சாதனங்கள் சேதமடைவதை தடுக்க, நாகை, வேளாங்கண்ணி மற்றும் கடலுாரை தொடர்ந்து, வேறு எந்தெந்த கடலோர பகுதிகளில் தரைக்கு அடியில், 'கேபிள்' வாயிலாக மின் வினியோகம் செய்யலாம் என, தமிழக மின் வாரியம் ஆய்வு செய்து வருகிறது.
நாகை, கடலுார் மாவட்டங்கள், புயலால் அடிக்கடி சேதமடைந்து வருகின்றன. சீரமைப்பு பணிக்காக, அதிகம் செலவாகிறது.
எனவே, கடலோர மாவட்டங்களில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில், கம்பத்திற்கு பதில் தரைக்கு அடியில் கேபிள் வாயிலாக, மின் வினியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்தது.
அத்திட்டம் முதல் கட்டமாக, நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மற்றும் கடலுாரில், 2018 இறுதியில் துவங்கியது. திட்ட செலவு, 400 கோடி ரூபாய். அதில் உலக வங்கி, 360 கோடி ரூபாய் கடன் வழங்கியது.
இரு நகரங்களிலும் தரைக்கு அடியில் கேபிள் வாயிலாக, மின் வினியோகம் செய்யும் பணி சமீபத்தில் முடிவடைந்தது.
எனவே, அடுத்து எந்தெந்த கடலோர பகுதிகளில், கேபிள் மின் வினியோகம் செய்யலாம் என்பது குறித்து ஆய்வு செய்து, அத்திட்ட பணியை விரைவில் துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
Advertisement