சென்னை:ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, 'ஆதார்' எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு பெறும் பணியை விரைந்து முடிக்குமாறு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தை, உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஒரே நபர் வெவ்வேறு முகவரியில், ரேஷன் கார்டு வாங்குவதை தடுக்க, பயனாளியின் 'ஆதார்' எண் அடிப்படையில், புதிய கார்டுகள் வழங்கப்படுகின்றன.
அரிசி, சர்க்கரை என, மொத்தம் உள்ள 2.23 கோடி கார்டுதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட, ஆதார் உள்ளிட்ட தகவல்களை மேம்படுத்தும் பணி நடக்கிறது.
அதன் அடிப்படையில் ஆய்வு செய்ததில், 14.84 லட்சம் கார்டுதாரர்கள், ஆதார் எண் இணைக்கப்படாத வங்கி கணக்குகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
அந்த கார்டுதாரர்களை தொடர்பு கொண்டு, ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விபரத்தை வாங்குமாறு, கூட்டுறவு சங்கங்களுக்கு, 2022 நவம்பரில் உணவு வழங்கல் துறை உத்தரவிட்டது.
இதற்காக, கார்டுதாரர்களின் பட்டியல்கள், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டன. ஊழியர்களும், கார்டுதாரர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஆதார் வங்கி கணக்கை கேட்டனர். இதுவரை, 50 ஆயிரம் பேர், அந்த விபரங்களை ரேஷன் கடைகளில் வழங்கியுள்ளனர்.
டிசம்பரில் பெய்த கன மழை, இந்தாண்டு ஜனவரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் போன்றவற்றால், கார்டுதாரர்களிடம் இருந்து ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விபரம் பெறும் பணி முடங்கியது.
எனவே, சம்பந்தப்பட்ட கார்டுதாரர்களை தொடர்பு கொண்டு, ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விபரங்களை விரைந்து பெறுமாறு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தை, உணவு துறை அறிவுறுத்தி உள்ளது.
Advertisement