சென்னை:தமிழகத்தில் கட்டுமான திட்டங்களில் வசூலிக்கப்படும் உறைவிட நிதி பயன்பாடு குறித்து, உலக வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
தமிழகத்தில், 2017ல் மாநில உறைவிட நிதி உருவாக்கப்பட்டது. 32 ஆயிரத்து 291 சதுர அடிக்கு மேல் கட்டப்படும் கட்டுமான திட்டங்களில், 10.7 சதுர அடிக்கு வழிகாட்டி மதிப்பில், 1.2 சதவீதம் வரையிலான தொகை உறைவிட நிதியாக வசூலிக்கப்படுகிறது.
இந்த நிதி, வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பணிகளுக்கு வழங்கப்படுகிறது.
இது குறித்து வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு திட்டம், உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப் படுகிறது. இது தொடர்பான பணிகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து, உலக வங்கி அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வகையில் சில நாட்களுக்கு முன், சென்னையில் உறைவிட நிதி வசூல், செலவிடுதல், முதலீடு தொடர்பான பணிகளின் நிலவரம் குறித்து ஆய்வு செய்தனர்.
வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மட்டுமல்லாது, தனியார் கட்டுமான அமைப்புகள் பிரதிநிதிகளுடன், உலக வங்கி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். உலக வங்கி அதிகாரிகள் அளித்த பரிந்துரைகள், அரசின் பரிசீலனைக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement