குன்னுார்:குன்னுாரில் குரும்பர் பழங்குடியின மகளிர், 3,000 ஆயிரம் ஆண்டு தொன்மை வாய்ந்த பாறை ஓவியங்களை, சேலை மற்றும் போர்வையில் வரைந்து பாரம்பரியம் காத்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் குரும்பர் பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.
பழங்கால ஓவியங்கள்
இவர்கள், நீலகிரியில் காணப்படும், 3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களில் இடம் பெற்ற தேன் எடுத்தல், இயற்கை வழிபாடு, விவசாயம் போன்ற பழங்குடியினரின் அன்றாட வாழ்வியல் சார்ந்த ஓவியங்களை ஆடைகளில் வரைந்து, தங்கள் பாரம்பரியத்தை காத்து வருகின்றனர்.
அதில், குன்னுார் புதுக்காடு கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில், குரும்பர் பெண்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் காரணமாக, சேலை, போர்வை உட்பட பல்வேறு ஆடைகளில், பாரம்பரிய ஓவியங்களை, 'அக்ரிலிக்' பெயின்டில் வரைந்து விற்பனை செய்கின்றனர்.
எனினும், அரசு அதிகாரிகளின் ஆதரவு இல்லாததால் தொடர்ந்து விற்பனை செய்வதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது.
கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி கூறுகையில், ''பழங்குடியினரின் பாரம்பரிய ஓவியங்கள் அழியாமல் காக்க, இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்களை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும்,'' என்றார்.
அரசு உதவி
பயிற்சியாளர் உஷா கூறுகையில், ''கதர் வாரியம் வாயிலாக துணி வகைகளில் இதுபோன்ற ஓவியங்கள் வரைந்து நேரடியாக விற்பனை செய்ய, பழங்குடியிருனக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்,'' என்றார்.
தற்போது, பழங்குடியினர் நலனுக்காக, பட்ஜெட்டில், 15 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இது போன்ற தொன்மையான ஓவியங்களை பாதுகாக்கவும், அதை ஆடைகள் மூலம் பலரும் அறிய செய்யவும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
Advertisement