தஞ்சாவூர்:தஞ்சாவூர், மாதாக்கோட்டையில் உள்ள மிருகவதை தடுப்பு சங்கக் கட்டடத்தில், செல்லப் பிராணிகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நேற்று துவங்கப்பட்டது.
தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில், சென்னைக்கு அடுத்த படியாக, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், மிருகவதை தடுப்பு சங்க சங்கக் கட்டடம் கட்டப்பட்டது.
அதில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், செல்லப்பிராணிகளுக்கு கருத்தடை ஆப்பரேஷன் நடைபெறும் தியேட்டர் திறக்கப்பட்டது.
ஆப்பரேஷன் தியேட்டரை, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று திறந்து வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு வெறிநாய் கடியால், 10 பேர் இறந்துள்ளனர். இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், தமிழகத்தில் முதல் முறையாக, கால்நடைகளுக்கு கருத்தடை ஆப்பரேஷன் தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இங்கு செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. மேலும், செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் நடந்து வருகிறது.
உள்ளாட்சி பணியாளர்கள் தெருநாய்களை பிடித்து வந்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், ஒரத்தநாடு கல்நடை மருத்துவக்கல்லுாரி முதல்வர் நர்மதா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் தமிழ்ச்செல்வம், கால்நடை உதவி டாக்டர் ஷெரீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement