நாமக்கல்:'சேலம், நாமக்கல் மாவட்டங்களில், உற்பத்தி செய்யப்பட்ட 'டவல்'கள், 150 கோடி ரூபாய் அளவுக்கு தேக்கம் அடைந்துள்ளன. அதனால், இலவச வேட்டி, சேலை திட்டத்தில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இரண்டு டவல் வழங்கினால், தேக்கம் குறையும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, வெண்ணந்துார் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் கூறியதாவது:
சேலம், நாமக்கல், கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர், விருதுநகர் உள்பட, தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும், ஒரு கோடிக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.
இத்தொழிலுக்கு முக்கிய தேவையான பருத்தி நுால் விலை, ஒரே சீராக இல்லாததால், நெசவாளர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஜவுளிக்கு ஆர்டர் எடுத்தால், அவற்றை முறையாக உற்பத்தி செய்து கொடுக்க முடியாத நிலையில், பருத்தி நுால் விலை திடீரென உயர்ந்து விடுகிறது.
அதனால், எடுத்த ஆர்டரை முறையாக செயல்படுத்த முடியாத நிலையில், நஷ்டம் ஏற்படும் நிலைக்கு நெசவாளர்கள் தள்ளப்படுகின்றனர்.
விற்பனை மந்தம்
பருத்தி நுால், மூன்று மாதங்களுக்கு ஒரே சீரான விலைக்கு விற்க வேண்டும். அதன் மூலம், நெசவாளர்கள் ஓரளவுக்கு தொழிலை தொடர முடியும்.
அடிக்கடி பருத்தி நுால் ஏற்றம் இறக்கம் காரணமாக, நெசவாளர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. கடந்த, எட்டு ஆண்டுகளாக வெளிநாட்டு ஏற்றுமதி குறைந்ததால், உள்நாட்டு ஜவளி அதிகரித்து, வரலாறு காணாத அளவுக்கு ஜவுளிகள் தேக்கம் அடைந்துள்ளன.
தொடர்ந்து விசைத்தறிகளை இயக்க முடியாத நிலையில், அடிக்கடி விசைத்தறி கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதி ஆர்டர் குறைந்ததால், நவீன விசைத்தறியாளர்கள் டவல் உற்பத்தியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
சாதாரண விசைத்தறியில், தினமும், 10 டவல் உற்பத்தி செய்யும் நிலையில், நவீன விசைத்தறிகளில், 100 டவல் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால், விற்பனையின்றி தேக்கம் அதிகரித்துள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது, ஜவுளி விற்பனை ஓரளவுக்கு இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், விற்பனையாகவில்லை. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும், 150 கோடி ரூபாய் அளவுக்கு, டவல்கள், துண்டுகள் தேக்கம் அடைந்துள்ளன.
இது, நெசவாளர்களுக்கு கடன் சுமையை அதிகரித்துள்ளது. பல பகுதிகளில், தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல், விசைத்தறிகளை 'கயலான்' கடைக்கு விற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
விசைத்தறி நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
ஜவுளிகள் தேக்கம்
நாமக்கல், சேலம் மாவட்டங்களில் அதிக அளவில், டவல் தேக்கம் அடைந்துள்ளது. அவற்றை சரி செய்து, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
தமிழக அரசு வழங்க உள்ள இலவச வேட்டி, சேலையுடன், ரேஷன்கார்டுதாரர்களுக்கு, தலா இரண்டு டவல் வழங்கினால், ஜவுளி தேக்கம் குறையும்.
தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து, விசைத்தறியாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement