புதுடில்லி:புதுடில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பாக பதில் அளிக்க, துணை நிலை கவர்னர் மற்றும் மாநகராட்சி தற்காலிக தலைவர் ஆகியோர் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி மாநகராட்சிக்கு டிச., 4ல் தேர்தல் நடத்தப்பட்டு, 7ல் ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்தது. ஆம் ஆத்மி 134, பா.ஜ., 104, காங்கிரஸ் 9 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், துணை நிலை கவர்னர் நியமித்த 10 கவுன்சிலர்களும் மேயர் தேர்தலில் ஓட்டுப் போடுவர் என தற்காலிக தலைவர் சத்ய சர்மா அறிவித்ததை ஆம் ஆத்மி கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.
புதுடில்லி மாநகராட்சியில் ஜன., 6, 24 மற்றும் நேற்று முன் தினம் என மூன்று முறை மேயர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., குறுக்கு வழியில் மேயர் பதவியை அடைய முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணை நடத்தியது.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி ஆஜராகி, “தேர்தல் முடிந்த பின், மாநகராட்சி மூன்று முறை கூட்டப்பட்டும் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடத்தப்படவில்லை.
மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த தற்காலிக தலைவர் வலியுறுத்துவதும், நியமன கவுன்சிலர்களுக்கு மேயர் தேர்தலில் ஓட்டுரிமை அளிப்பதும் டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்துக்கு எதிரானது.
இது ஜனநாயக படுகொலை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் '243 - ஆர்' பிரிவை மீறி, நியமன கவுன்சிலர்கள் மேயர் தேர்தலில் ஓட்டுப் போடலாம் என மாநகராட்சியின் தற்காலிக தலைவர் அறிவித்தது குறித்து, நீதிமன்றம் விரிவாக விசாரிக்க வேண்டும்,” என, வாதிட்டார்.
புதுடில்லி மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் தொடர்பாக, வரும் 12ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு துணை நிலை கவர்னர் சக்சேனா, மாநகராட்சி தற்காலிக தலைவர் சத்ய சர்மா ஆகியோருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.